`அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்' என்ற இயக்கத்தை அறிவித்தார் தினகரன்! #TTVDinakaran #LiveUpdates

* கழகத்தின் கொடியை ஏற்றிவைத்த டி.டி.வி.தினகரன், ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே திறந்த காரில் பயணித்து வாழ்த்துகளைப் பெற்றார். 

* அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை வழங்கினார் தினகரன்.

* ''இன்று முதல் நமது இயக்கத்தில் உறுப்பினர் சேர்ப்பதற்கான பணி துவங்க உள்ளது. இதுவரை எந்த இயக்கத்திலும் இல்லாத அளவு உறுப்பினர்களை நமது இயக்கத்தில் சேர்க்க வேண்டும். இளைஞர்கள், தாய்மார்கள் என அனைவரின் ஆதரவும் நமக்கு உள்ளது. அவர்கள் அனைவரையும் நீஙகள் தேனீக்கள் போல செயல்பட்டு, நமது இயக்கத்தில் சேர்க்க வேண்டும்'' எனக் கூறி, தனது உரையை முடித்தார்  தினகரன்.

*அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இனி எந்தத் தேர்தல் வந்தாலும் இந்தப் பெயருடனும், இந்தக் கொடியுடனும் மட்டுமே செயல்படும். இந்த இயக்கம், தமிழக மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த அனுமதிக்காது.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்

* தனது இயக்கத்தின் பெயரை அறிவித்தார் தினகரன்.  'அம்மா மக்கள் முனேற்றக் கழகம்' என்ற பெயரையும் கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களின் நடுவே ஜெயலலிதா உருவம் பதித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

* பேசத் துவங்கினார் தினகரன். ''துரோகிகள் அளித்த மனுவால், நமது வெற்றிச் சின்னமான அ.தி.மு.க சின்னத்தையும், கொடியையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. அதன்பிறகு, ஆர்.கே நகர் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு, உங்கள் வீட்டுப்பிள்ளையான நான் தி.மு.க-வின் டெபாசிட்டை இழக்கச் செய்தேன்'' என்றார்.

* தற்போது மேடையில் பேச உள்ளார் டி.டி.வி. தினகரன்.  அவருக்கு வீர வேலை வழங்கினார், வெற்றிவேல்.  அதை, தமிழகத்தின் நலன் காக்க வழங்கப்படுவதாகக் கூறினார்.

* ''நான் யார் தலையில் கைவைக்கிறேனோ, அவர் மடிய வேண்டும் என சிவனிடம் வரம் பெற்ற அரக்கன், இறுதியில் சிவன் தலையிலேயே கைவைத்தது போல உள்ளது, ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்-ன் செயல். தினகரன் இல்லையென்றால், இப்போது அந்த இருவரும் இல்லை'' எனக்கூறி  தங்க தமிழ்ச்செல்வன் தனது உரையை முடித்தார்.

* தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் மேடையில் பேசி வருகிறார். அ.தி.மு.க-வை வழிநடத்தக்கூடிய தகுதி தினகரனுக்கு மட்டுமே உள்ளது. உள்ளாட்சித் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ வந்தால், தினகரன் மட்டுமே வெற்றிபெறுவார். டெல்லி உயர் நீதிமன்றம் கூறித்தான் இந்த இயக்கம் துவக்கப்படுகிறது.

* 'வாங்கய்யா வாத்தியாரய்யா' பாடல், பின்னணியில் ஒலிக்க மேடைக்கு வந்தார் தினகரன்.

மதுரை அருகே உள்ள மேலூரில், இன்று டி.டி.வி. தினகரன் தொடங்க உள்ள புதிய அமைப்பின் தொடக்க நிகழ்ச்சி, சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.

தினகரன்

பட்ஜெட் வாசிக்கும் முன், புதிய இயக்கத்தைத் தொடங்குவதுபோல நிகழ்ச்சி நிரலைத் தயார்செய்துள்ளார்கள். நேற்று மாலை முதல் மேலூர் அழகர் கோயில் சாலையிலுள்ள விழா பந்தலில் தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள். இரவு முழுவதும் அந்த வட்டாரமே 'ஜேஜே' என்றிருந்தது.

மதுரை டு மேலூர் நான்கு வழிச்சாலையின் இரு பக்கமும், கொட்டாம்பட்டியிலிருந்து, திருப்பத்தூர், சிவகங்கையிலிருந்து மேலூர் வருகிற அனைத்து சாலைகளின் இருபுறமும் டி.டி.வி-யை வரவேற்று பேனர்கள் வைத்திருக்கிறார்கள்.  இடைவெளி இல்லாமல் தென்னை ஓலைத் தோரணங்கள், கட்சிக் கொடிகள் கட்டியுள்ளனர். வெளிமாவட்ட ஆதரவாளர்கள்,  ஏரியாவிலுள்ள அனைத்து தங்கும் விடுதியிலும், திருமண மண்டபங்களிலும் தங்கியுள்ளனர். விடுதிகள் கிடைக்காததால், பலர் விழா பந்தலிலும், வாகனங்களிலும் தங்கினார்கள்.

தினகரன்
 

தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பலாஜி உட்பட அனைத்து நிர்வாகிகளும் மேடைக்கு வந்துவிட்டார்கள். தங்க தமிழ்ச்செல்வன் மேடைக்கு வந்ததும் விசில் சத்தமும் கை தட்டலும் பறந்தன. திருவிழாவுக்கு வருவதுபோல ஆதரவாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் சற்று நேரத்தில், டி.டி.வி. தினகரன் மேடைக்கு வந்ததும் கட்சிப் பெயர் அறிவிக்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!