எத்தனை முறைதான் மனு கொடுப்பது? - கூடுவாஞ்சேரியில் ரயில்கள் சிறைபிடிப்பு

ரயில் மறியல்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் தாமதமாக இயக்கப்படுவதைக் கண்டித்து, கூடுவாஞ்சேரி அருகே 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.


சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில், நாள்தோறும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டுவருகிறது. தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள், இந்த மின்சார ரயில் சேவையைப் பெரிதும் சார்ந்துள்ளனர்.  கடந்த சில மாதங்களாக, இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள்  தாமதமாக வருவதால், பணிக்குச் செல்வோரும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. 
இந்நிலையில், தொடர்ந்து ரயில் சேவை தாமதமாக இயக்கப்படுவதால், ஆத்திரம் அடைந்த பயணிகள்  இன்று கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் மறியல்


இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட ரஃபி என்னும் பயணி பேசுகையில், ‘தினமும் இதே பிரச்னைதான். ரயில் தாமதமாக வருவதால் அலுவலகத்துக்கு நேரத்துக்குச் செல்ல முடியவில்லை. இதுபற்றி ரயில்வேயில் நிறையத் தடவை மனு கொடுத்துவிட்டோம். நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை’ என்றார் ஆவேசத்துடன்.


ரயில் மறியல் போராட்டம் நீடிப்பதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. ரயில்களுக்குக் காத்திருந்த பயணிகள், பேருந்து நிலையத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!