வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (15/03/2018)

கடைசி தொடர்பு:11:36 (15/03/2018)

தொட்டியில் விழுந்த குட்டி யானை... பாசப்போராட்டம் நடத்திய தாய் யானை

கோவையில், தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை பத்திரமாக மீட்கப்பட்டது.

குட்டியானை

கோவை மாவட்டம், அனுபாவி சுப்பிரமணியர் கோயில் அருகே உள்ள தண்ணீர்த் தொட்டியில் 1 மாதம் மதிக்கத்தக்க குட்டி யானை விழுந்துவிட்டது. இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், தாய் யானை அவர்களை அருகில் விடாமல் பாசப்போராட்டம் நடத்தியது. பின்னர், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தொட்டியை உடைத்து குட்டி யானை காப்பாற்றப்பட்டு, தாய் யானையுடன் இணைக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “நாங்கள் தகவல் அறிந்து சென்றபோதே, அந்தத் தொட்டி அருகில் தாய் யானை இருந்தது. எங்களை அது அருகிலேயே விடவில்லை. மேலும், அது குரல் கொடுத்தவுடன் மற்றொரு  யானை, குட்டி யானை சம்பவ இடத்துக்கு வந்துவிட்டது. இதனால் பதற்றம் அதிகரித்தது. ஆனால், அந்தத் தாய் யானையை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அது அழுவதுபோல பிளிறியதோடு ஜீப்பை முட்டியது. என்ன செய்வதென்றே தெரியாமல் அலைமோதியது. ஒருகட்டத்தில் தாய் யானைக்கு, வயிற்றுப்போக்கே ஆகிவிட்டது.

ஒருவழியாக நாங்கள் தொட்டிக்குள் இறங்கினோம். பின்னர், ஜே.சி.பி உதவியுடன், தொட்டியை உடைத்து குட்டி யானையை மீட்டோம். பின்னர், அதை தாய் யானையுடன் சேர்த்து வனப்பகுதிக்குள் விட்டோம்” என்றனர்.