வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (15/03/2018)

கடைசி தொடர்பு:16:44 (23/07/2018)

'தொழில்நுட்பம் பெருகிடுச்சு... குடிநீருக்கு வழியில்லை' - இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்

''இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, நல்ல குடிநீர் கிடைக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு போர்வெல் அமைத்து மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கம்யூனிஸ்ட்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் அதன் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. மாவட்டச் செயலாளர் மு.மாதவன் கலந்துகொண்டு, இன்றைய அரசியலின் போக்கு, மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் உள்ள தேக்கம், மக்களின் பிரச்னைகளை முன்வைத்து நடத்தவேண்டிய போராட்டங்களின் அவசியம்குறித்து விரிவாகப் பேசினார். இந்தக் கூட்டத்தில், அன்னவாசல் ஒன்றியத்தின் முக்கிய பிரச்னைகள் பட்டியலிடப்பட்டன. இந்த விசயங்களை வலியுறுத்தி, வரும் 21.03.2018. அன்று, அன்னவாசலில் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

நாம், மாவட்டச் செயலாளர் மாதவனை தொடர்புகொண்டு பேசினோம். "வசதிகளும் தொழில்நுட்பங்களும் நாட்டில் பெருகிவிட்டன. இந்தியா பெரும் வளர்ச்சியை நோக்கி நான்கு கால் பாய்ச்சலில் போய்க்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அடிப்படை வசதியான குடிநீர் கிடைக்காமல், பெண்கள் சாலை மறியலில் இறங்கும் நிலைமைதான் இன்றைக்கும் நீடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் அதுதான் பிரச்னை. கடந்த 19.07.2017 அன்று, இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், காவிரி குடிநீர் கூட்டுத் திட்டத்தில் உள்ள குறைகள் 3 மாதங்களில் முழுவதுமாக நீக்கப்பட்டு, குடிநீர் பிரச்னைகள்  தீர்க்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி தந்தார்கள். ஆனால், இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை. இன்றைய நவீன தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, நல்ல குடிநீர் கிடைக்கும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு போர்வெல் அமைத்து மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

அன்னவாசல் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. லோ வோல்டேஜ் பிரச்னையால் இந்தப் பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதுபோல, சாலைகளும் மோசமான நிலையில் இருக்கின்றன. உதாரணமாக, அன்னவாசலிலிருந்து கீரனூர் செல்லும் சாலையில் உள்ள கீழக்குறிச்சி சாலை மிக மோசமான நிலையிலும் சித்துப்பட்டியில் உள்ள சாலை 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடுமையாகச் சேதமடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும். இந்தப் பிரச்னைகளைத் தவிர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பிரச்னைகள் இருக்கிறது. தனி கட்டடத்தில் தனி அலுவலகமாகச் செயல்படவேண்டிய உதவிக் கல்வி அலுவலர் அலுவலகம், அன்னவாசல் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் வகுப்பறைகளை ஆக்கிரமித்து செயல்பட்டுவருகிறது. மாவட்டத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் செயல்படும் இந்தப் பள்ளியில், இப்படியொரு அவலம் நடக்கிறது. இதன்மூலம், மாணவர்களின் உரிமை, கல்வி அலுவலர்களாலேயே பறிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்தப் பள்ளி மாணவர்கள், வகுப்பறை இருந்தும் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கிறார்கள். இந்தப் பிரச்னைகளை எல்லாம் சரிசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வரும் 21-ம் தேதி அன்னவாசலில் சாலை மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம்" என்றார்.