'காப்பாத்துங்க... அம்மாகிட்ட போகணும்'- வகுப்பறையில் பூட்டப்பட்ட மாணவன் கதறல் | Student locked inside class room

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (15/03/2018)

கடைசி தொடர்பு:19:10 (15/03/2018)

'காப்பாத்துங்க... அம்மாகிட்ட போகணும்'- வகுப்பறையில் பூட்டப்பட்ட மாணவன் கதறல்

மாணவன்

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அலட்சியத்தால், வகுப்பறையில் வைத்துப் பூட்டப்பட்ட 10 வயது சிறுவன். “அக்கா, அண்ணா யாராவது என்னைக் காப்பாத்துங்க…” என்று அலறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, மதகடிப்பட்டுப் பகுதியை அடுத்திருக்கிறது, பி.எஸ்.பாளையம். இங்கிருக்கும் இருளர் குடியிருப்பில், செல்லப்பன் என்ற கூலித் தொழிலாளி வசித்துவருகிறார். அவரது 10 வயது மகன் வேல்முருகன், அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற மாணவன், மாலையில் பள்ளி முடிந்த நேரத்திற்குப் பின்னும் வீடு திரும்பாததால், பெற்றோர் பள்ளிக்கு வந்திருக்கின்றனர். அங்கே பள்ளி பூட்டப்பட்டிருந்ததால், மற்ற பகுதிகளுக்குச் சென்று தேடத் தொடங்கினர். இந்நிலையில், பள்ளிக்குள் இருந்து, “அண்ணா, அக்கா யாராவது என்னைக் காப்பாத்துங்க… நான் அப்பா, அம்மாகிட்ட போகணும்… வீட்டுக்குப் போகணும்…” என்று சிறுவன் ஒருவனின் அழுகுரல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.

அந்த வழியாக சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள், அந்தக் குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, பள்ளிக்குள் சென்று பார்த்தனர். அப்போது, அங்கே பூட்டப்பட்டிருந்த வகுப்பறையின் இரும்புக் கேட்டின்மீது ஏறி நின்றுகொண்டு, ''காப்பாத்துங்க…. அம்மாகிட்ட போகணும்...” என்று கதறிக்கொண்டிருந்தான் அச்சிறுவன். உடனே அங்கிருந்தவர்கள், திருபுவனைக் காவல் நிலையத்துக்குத் தகவல் கூறினர். அதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், மாலை 6.30 மணியளவில் பூட்டை உடைத்து சிறுவனை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். காலையில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் வேல்முருகன், மதிய உணவிற்குப் பிறகு தனக்குக் காது வலிப்பதாக ஆசிரியையிடம் தெரிவித்திருக்கிறான்.


அதற்கு, “கடைசி பெஞ்சில் போய் படு” என்று கூறியிருக்கிறார் அந்த ஆசிரியை. கடைசி பெஞ்சில் படுத்த சிறுவன், அப்படியே தூங்கிப்போயிருக்கிறான். நான்கு மணிக்கு பள்ளி விட்டதும், சிறுவன் தூங்கிக்கொண்டிருந்ததைக் கவனிக்காமல், அனைத்து வகுப்பறைகளையும் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்கள், ஆசிரியர்களும் ஊழியர்களும். கண் விழித்துப் பார்த்தபோது, தான் வகுப்பறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்த சிறுவன், பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டான். இந்நிலையில், கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள்மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க