வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (15/03/2018)

கடைசி தொடர்பு:13:07 (15/03/2018)

சட்டப்பேரவைக்கு கறுப்புச் சட்டை! - வந்த வேகத்தில் கிளம்பிய ஸ்டாலின் #TNBudget2018

இன்று சட்டப் பேரவையில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரைப் புறக்கணிப்பு செய்து ஸ்டாலின் மற்றும் திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குத் தமிழக அரசு தகுந்த அழுத்தம் தரக்கோரியும், அரசின் அலட்சியப் போக்குக்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிந்து இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு வருகை தந்தனர். இதனால் பேரவை வளாகம் சற்றுப் பரபரப்பாகக் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து பேரவை தொடங்கியதும் தி.மு.க-வினர் அமளியில் ஈடுபட்டு துணை முதல்வரின் பட்ஜெட் உரை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின்  ''காவிரி விவகாரத்தில் பிரதமர் அனைத்துக்கட்சிக் குழுவினரைச் சந்திக்க மறுக்கிறார், தி.மு.க. சார்பில் முதலமைச்சரிடம் சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டுங்கள் என்று கோரிக்கை வைத்தோம்,  அதிகாரிகள் கூட்டத்திற்குப் பிறகு முடிவு செய்வோம் எனத் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்பொழுது இது காலம் தாழ்த்தும் விவகாரம் என்று தெரிவித்தேன். இதையெல்லாம் அடிப்படையாக வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போதிய அழுத்தம் தெரிவிக்காத காரணத்தால் கறுப்புச் சட்டை அணிந்து கண்டனம் தெரிவித்துள்ளோம், தி.மு.க. எம்.பி-களும் கறுப்புச் சட்டை அணிந்துள்ளார்'' எனத் தெரிவித்தார்.

இதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அதே கோரிக்கையை முன்வைத்து வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ''தன்னிச்சையாகச் செயல்படாத அரசாகத் தமிழக அரசு உள்ளது.  இந்த அரசு தொடர்வதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் இல்லை  இந்த பட்ஜெட் கண் துடைப்பு பட்ஜெட், இதனைப் புறக்கணிக்கிறோம்'' என்றார்.