கட்சியும் கொடியும் எதுவரை செயல்படும்! மேடையில் அறிவித்த தினகரன்

தினகரன்

மதுரை  மேலூர் எஸ்.பி.ஆர் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வந்த தினகரன், தனது பேச்சைத் தொடங்கி கொடியையும் கட்சிப் பெயரையும் 10.30 மணிக்கு அறிமுகம் செய்தார். பின் மேடையில் பேசிய அவர், "மார்ச் 12-ம் தேதி மதுசூதனன், ஓ.பி.எஸ் கொடுத்த மனுவால் ஆர்.கே.நகர் தேர்தலில் கட்சிப் பெயரைப் பயன்படுத்த முடியவில்லை. அதனால் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டேன். தேர்தல் ஆணையம் அவர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தையும் கட்சிப் பெயரை பயன்படுத்தவும் அனுமதி அளித்தது. அதற்குப் பின், தொப்பி சின்னம்கூட பறிக்கப்பட்டு அடுத்த தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். உதயசூரியனை டெபாசிட் இழக்கச் செய்தேன். இரட்டை இலைச் சின்னம் என்பதால் அவர்களுக்கு டெபாசிட் கிடைத்தது. அவர்கள் இரட்டை இலையில் நிற்கவில்லை என்றால் டெபாசிட்கூட கிடைத்திருக்காது. நான் மக்களின் ஆதரவைப் பெற்று 50% மேல் வாக்குகளைப் பெற்றேன். பல சதிகாரக் கும்பலால் பல சிரமங்களை அடைந்தேன். அதற்குப் பின் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம்.

தினகரன் கட்சிக்கொடி

டெல்லி உயர் நீதிமன்றம் தினகரன் கேட்கின்ற பெயரையும் குக்கர் சின்னத்தையும் வழங்க 9-ம் தேதி உத்தரவிட்டது. விரும்பிய பெயர் இல்லாமல் செயல்பட்ட நாம் இன்று முதல் நமக்கென தனி பெயரில் செயல்பட உள்ளோம். துரோகிகளின் முகத்தைக் கிழிக்கும் வகையில் புதிய பெயரை அறிவிக்கிறேன். அது "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்" ஆகும். இந்தப் பெயர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து பேசி தேர்வு செய்தது. நமது கட்சியின் கொடியைத் தேர்வு செய்தது தஞ்சாவூர் மாவட்டம் 39 வார்டு செயலாளர் வெங்கட்ராமன். நாம் நம் கழகத்தை மீட்டு எடுக்கும் வரை குக்கர் சின்னமும் இந்தக் கொடியும் கட்சியின் பெயரும் செயல்படும். நமது அமைப்பு காவிரியில் முறையான தண்ணீர் பெற்று தரும். படித்த இளைஞர்களுக்கு தொழில்துறையில் சிறந்து விளங்க வழி வகுக்கும். அம்மாவின் வழியில் தமிழகத்தை நல்ல வழியில் கொண்டு செல்வோம்'' என முழங்கினார்.

தினகரன்

மேலூர்  எஸ்.பி.ஆர் மைதானத்தில்  உள்ள இடத்தில் 60-க்கு 40 வடிவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடை மற்றும் அதன் எதிர்புறம் உள்ள இடத்தில்  டி.டி.வி.தினகரன் உட்பட அவரின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். மேடைக்கு வந்த டி.டி.வி.தினகரன் பேசி முடித்த பின் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் அவரது கட்சியின் கொடியை ஏற்றி வைத்த பின் அங்கிருந்து  கிளம்பினார் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!