வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (15/03/2018)

கடைசி தொடர்பு:16:24 (15/03/2018)

`இலங்கை அரசின் புதிய சட்டத்தை தடுங்கள்' - மக்களவையில் மீனவர்களுக்காகக் குரல் கொடுத்த அன்வர்ராஜா

இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் பிடியிலிருந்து தமிழக மீனவர்களை காத்திட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.பி. அன்வர்ராஜா நாடாளுமன்ற மக்களவையில் விதி எண் 377-ன் கீழ் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்வர்ராஜா

இது குறித்து மக்களவையில் அன்வர்ராஜா வைத்த கோரிக்கையில் ''தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்கள் படகுகள், மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம் என்பது உட்பட பல கடுமையான தண்டனைகள் விதிக்க வகை செய்யும் விதத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 25 ஜனவரி 2018 அன்று கொடிய சட்டம் ஒன்றினை இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும், இந்த 50 லட்சம் அபராதத் தொகையினை ஒரு மாத காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மீனவர் மற்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் குறித்து கடுமையாக முடிவெடுக்கலாம் என்றும், இதனால் தமிழக மீனவர்களின் பாரம்பர்ய மீன்பிடி உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்துக்கே உலை வைத்திடும் நோக்கில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கொடிய சட்டம் தமிழக மீனவர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தமிழக மீனவர்கள் தத்தமது மீன்பிடித்தொழிலை விட்டுவிட்டு மாற்றுத் தொழில் தேடி இங்கிருந்து வேளிடம் நோக்கிச்செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இக்கொடிய சட்டத்தின் பிடியிலிருந்து மீனவர்களைக் காத்திட மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் 26.01.18 அன்று பிரதமரிடம் இக்கொடிய சட்டத்தின் பாதிப்புகள் குறித்து கருத்து தெரிவித்து, அவர் உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கும் தக்க நடவடிக்கைகள் எடுக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுத்தினார். மேலும், இந்தச் சட்டத்தின் வாயிலாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நீண்ட காலம் சிறையிலடைக்கவும், பெருந்தொகை அபராதமாக விதிக்கவும் முடியும் என்பதால் மீனவர்களின் துயரம் பன்மடங்காக அதிகரிக்கும் என்றும் முதல்வர் விளக்கியுள்ளார்.

தமிழக மீனவர்களின் துயரங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று இந்திய- இலங்கை கூட்டமைப்பு எத்தனிக்கும் வேளையில் இலங்கை அரசு இப்படிப்பட்ட மீனவர் விரோத கொடுஞ்சட்டம் இயற்றியுள்ளது துரதிர்ஷ்டமாகும். எனவே இலங்கை அரசு கொண்டு வந்துள்ள இக்கொடிய சட்டத்தின் பிடியிலிருந்து தமிழக மீனவர்களை காத்திட இந்திய அரசு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக தக்க தூதரக நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்'' எனப் பேசினார்.