`அ.தி.மு.க ஒரு சிங்கம்; அதன்மீது ஒரு கொசு உட்கார்ந்துவிட்டது!' - ஜெயக்குமார் விமர்சனம்

துயரத்தில் இருப்பதால் தி.மு.க-வினர் கறுப்புச் சட்டை அணிந்து வந்துள்ளனர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் ஜெயக்குமார்

2018-19-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 8 வது முறையாகப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் 2.30 மணிநேரம் நிகழ்த்திய பட்ஜெட் உரையில் பள்ளிக்கல்வித்துறை அதிக நிதி ஒதுக்கீடு, புதிய வரி விதிப்பு கிடையாது, தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. எதிர்கொள்ளவுள்ள உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு, பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்தனர். பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்தனர். மேலும், பட்ஜெட் உரையைப் புறக்கணித்து வந்த வேகத்திலேயே தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். 

இதுகுறித்து மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "தி.மு.க-வினர் துயரத்தில் இருப்பதால் அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்துள்ளனர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த வழியில் பட்ஜெட் இருக்கும். கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறுவது தவறு. படிப்படியாக அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம். அதன் பிரதிபலிப்பாக பட்ஜெட் இருக்கும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தொடர்ந்து தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. சிறப்புக் கூட்டம் நடத்துவது குறித்து சட்டப்பேரவைதான் முடிவு செய்யும். தமிழக அரசுக்குப் போதிய பெரும்பான்மை உள்ளது" என்றார். முன்னதாக டி.டி.வி.தினகரன் புதிய அரசியல் அமைப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "அ.தி.மு.க என்ற சிங்கத்தின்மீது ஒரு கொசு உட்கார்ந்து விட்டது" எனக் கூறி விமர்சனம் செய்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!