``மொபைல் போனால் போட்டோ ஜர்னலிசத்துக்கு பாதிப்பில்லை! ''- இந்தியா வந்த நிக் உட் கருத்து

வியட்நாம் போரின்போது, சிறுமி நிர்வாணமாக ஓடும் புகைப்படத்தை எடுத்தவர் அசோசியட் பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நிக் உட். அசோஸியேட் பிரஸ்ஸிலிருந்து நிக் உட் 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது, பல்வேறு நாடுகளுக்குச் சென்று புகைப்படக் கலை குறித்து வகுப்பு எடுத்து வருவதோடு, கருத்தரங்குகளில் பங்கேற்றும் உரையாற்றுகிறார். 

 

 Vietnam War photographer Nick Ut

அந்த வகையில் ,  'மலையாள மானோரமா' பத்திரிகை அலுவலகத்தில் புகைப்படக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க கோட்டயம் வந்துள்ள நிக் உட், 'போர்க்களங்களில் புகைப்படக் கலைஞர்கள் இறப்பது அதிகரித்து வருவது குறித்து வேதனை தெரிவித்தார். மேலும், மொபைல் போன்கள் வந்த பிறகு எல்லோருமே போட்டோகிராபர்கள் ஆகி விட்டனர். இதுவும் கூட நல்ல மாற்றம்தான். மொபைல் போன்களின் வருகையால் போட்டோ ஜர்னலிஸத்துக்கு பாதிப்பில்லை என்றே நம்புகிறேன். வியட்நாம் போர் நிகழ்ந்த காலத்தைவிட தற்போதுதான் போர்க்களங்களில் ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் மரணமடைந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது '' என்றார். 

வியட்நாமில் நப்ளம் என்ற இடத்தில், பான் தை கிம் பக் என்ற சிறுமி ஓடி வருவதைதான் நிக் உட் புகைப்படமாக்கினார். உடனடியாக அந்தச் சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார். 'புகைப்படம் எடுத்ததுடன் எனது பணி முடிந்துவிட்டது என்று நான் போயிருந்தேன் என்றால் கெவின் கார்ட்டர் போல நானும் தற்கொலை செய்திருப்பேன்' என்று ஒருமுறை நிக் உட் கூறினார். 1973-ம் ஆண்டு இந்த புகைப்படத்துக்கு கௌரவமிக்க புலிட்சர் விருது வழங்கப்பட்டது. 

சூடான் பஞ்சத்தின்போது, சிறுமியை கொத்தித் தின்ன காத்திருக்கும் கழுகின் புகைப்படத்தை எடுத்தவர்தான் கெவின் கார்ட்டர். 1993-ம் ஆண்டு உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்தப் புகைப்படத்துக்கும் புலிட்சர் விருது கிடைத்தது. சிறுமியின் நிலை குறித்து கெவின் கார்ட்டர் யோசிக்காமல் சென்றுவிட்டார். அதனால், ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக அடுத்த ஆண்டே அவர் தற்கொலை செய்து கொண்டார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!