`பா.ஜ.க உறுப்பினரானால் ஒரு லட்சம் கடன்' - நம்பிவந்தவர்களுக்கு அதிர்ச்சியளித்த மோசடி மன்னன்!

பா.ஜ.க-வில் உறுப்பினராகச் சேர்ந்தால் பிரதமர் மோடியின் திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி அந்தக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மோசடி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. வக்கீலான இவர் பா.ஜ.க-வில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரமாக அப்பகுதி பெண்களிடம் பா.ஜ.க-வில் உறுப்பினராகச் சேர்ந்தால் பிரதமர் மோடியின் திட்டத்தின்கீழ் குழு மூலம் ஒரு லட்சம் கடன் பெற்றுத்தரப்படும். அதற்கு  40,000 ரூபாய் மானியம்போக 60,000 மட்டும் தவணை முறையில் செலுத்தினால் போதும் எனக் கூறி ஏராளமான பெண்களிடம் அதற்கான ஆவணங்களை வாங்கியதோடு அதற்காக 100 ரூபாய் பணமும் வசூல் செய்தார்.

இந்தத் தகவல் அப்பகுதி முழுவதும் வேகமாகப் பரவியதால் ஆயிரகணக்கான பெண்கள் மேலவீதியில் உள்ள ராஜாவின் இல்லத்தில் முன்பு திரண்டனர். இது குறித்து சி.பி.எம் கட்சியின் பாபநாசம் ஒன்றியச் செயலாளர் காதர் உசேன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து ராஜா அவரின் மகன் புலித்தேவன் மற்றும் சிலரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காதர் உசேனிடம் பேசினோம், "பிரதமர் மோடியின் பெயரை சொல்லி பா.ஜ.க-வில் உறுப்பினராகச் சேர்ந்தால் குழு மூலம் ஒரு லட்சம் கடன் தருவதாகக் கூறி ஒரு வாரமாக ராஜா என்பவர் பெண்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கியுள்ளார். 

அதற்காக அவர்களிடம்  100 ரூபாய் பணம் வசூல் செய்ததோடு, போட்டோ எடுக்க மற்றும் விண்ணப்ப படிவத்தை நிரப்ப என 100 ரூபாய் என மொத்தம் 200 ரூபாய் பணம் வசூல் செய்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு வந்த பெண்களிடம் பா.ஜ.க கட்சியின் விண்ணப்ப படிவத்திலும் கையெழுத்து வாங்கி முறைகேடு செய்துள்ளார். இது குறித்து நான் புகார் செய்த பிறகு, அவர்களைக் கைது செய்துள்ளனர் காவல் துறையினர். இது ஒரு புறம் இருக்க பா.ஜ.க-வை சேர்ந்த அப்பகுதி நிர்வாகிகள், `அவர் கட்சியில் உறுப்பினாராகச் சேர்ந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. எனவே கட்சிக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது’ எனக் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!