வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (15/03/2018)

கடைசி தொடர்பு:18:20 (15/03/2018)

ஒரே நாளில் உயர்ந்த 30 அடி நீர் மட்டம்- தண்ணீரை வீணாக்கிய அதிகாரிகள்!

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சேர்வலாறு அணையில் ஒரே நாளில் 30 அடி நீர்மட்டம் அதிகரித்த நிலையில், மறுநாளிலேயே அதிகாரிகள் அந்த நீரை வீணாகத் திறந்துவிட்டதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். 

நீர்மட்டம் அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய மூன்று அணைகள் பிரதான அணைகளாகும். இந்த அணைகளின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 86,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 32.80 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.85 அடியாக உள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 19.68 அடியாக மாறி தண்ணீர் இல்லாமல் சேறும் சகதியுமாகக் கிடக்கிறது. 

வங்கக் கடலில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையின்போது, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 19 அடியிலிருந்து 49 அடியாக உயர்ந்தது. சேர்வலாறு அணையில் ஒரேநாளில் 30 அடி நீர் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அந்த அணையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 

அதனால், ஒரே நாளில் அனைத்துத் தண்ணீரும் வெளியேற்றப்பட்டு மீண்டும் 19 அடிக்கு வந்துவிட்டது. இது விவசாயிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து பேசிய சமூக ஆர்வலரான அ.வியனரசு, ‘’நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்தும் தண்ணீர் கொள்ளை நடக்கிறது. தற்போது அறுவடைப் பணிகள் நடந்துவருவதால் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படாத நிலையில் என்ன காரணத்திற்காக திறந்துவிட்டுள்ளார்கள்? 

நெல்லையில் உள்ள பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள், தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் செல்ல வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் அணையைத் திறந்துவிட்டு தண்ணீரை வீணடித்து விட்டார்கள். இது அப்பட்டமான தண்ணீர் கொள்ளை. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் நெல்லை மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’’ என்றார் காட்டமாக. 

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டதற்கு, ‘’தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத் தேவைக்குத் தண்ணீர் தேவைப்படுவதன் காரணமாகவே திறக்கப்பட்டிருக்கிறது. கோடைகாலத்தைச் சமாளிக்கும் அளவுக்கு அணையில் நீர் இருப்பு உள்ளது. ஒருவேளை பற்றாக்குறை ஏற்படுமானால் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரை நிறுத்துவது குறித்து பரிசீலிப்போம்’’ என்று மழுப்பலாகப் பதிலளித்தார்.