வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (15/03/2018)

கடைசி தொடர்பு:19:30 (15/03/2018)

`ரொம்பக் கவனமாக இருக்கணும்; கண் அசந்தா அவ்வளவுதான்' - இரவுப் பணியால் குமுறும் ரயில் ஓட்டுநர்கள்

ரயில்வே போராட்டம்

“ஓய்வில்லாமல் தொடர்ந்து இரவு நேரங்களில் ரயிலை ஓட்டுவதுதான் பல நேரங்களில் ரயில் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. எனவே, ரயில் ஓட்டுநர்களுக்கு வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும்” என லோக்கோ (ரயில் இன்ஜின்) ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகில இந்திய லோக்கோ ஓடும் (ரயில் இன்ஜின் ஓட்டும்) தொழிலாளர் கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஈரோடு ரயில்வே ஜங்ஷன் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், ‘ரயில் இன்ஜின் ஓட்டும் லோக்கோ பைலட்களுக்கு வார ஓய்வு மற்றும் தொடர் இரவுப் பணிகளை முறைப்படுத்த வேண்டுமெனவும், தற்போதுள்ள காலிப் பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கூடாதெனவும், ரயில்வே காலனியில் சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டும்’ எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தினர்.

இந்தப் போராட்டம் குறித்து அகில இந்திய லோக்கோ ஓடும் தொழிலாளர் கழகத்தின் சேலம் கோட்டத் தலைவர் பி.எஸ்.ஜி பிரகாஷ் பேசுகையில், “ஈரோட்டில் கிட்டத்தட்ட 350 ரயில்வே குடியிருப்பு இருக்கு. இந்தக் குடியிருப்புகளுக்குக் காவிரி ஆற்றிலிருந்து எடுக்கும் தண்ணியைச் சுத்திகரிக்காமல் அப்படியே விநியோகம் செய்கிறார்கள். அந்தத் தண்ணீரில் கழிவுகள் கலந்து குடிக்க முடியாத நிலையில் இருக்கு. அதை சுத்தப்படுத்தித் தர வேண்டும். ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே வாரியத்தால் அமைக்கப்பட்ட அமைப்புகளின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “இப்போது ஒரு லோக்கோ பைலட் (ரயில் ஓட்டுநர்) வாரத்திற்கு 6 நாள்கள் இரவுப்பணி பார்த்து வருகின்றனர். தொடர்ந்து 6 இரவுகள் பணி செய்வதால் ஓட்டுநர்களுக்குத் தேவையான ஓய்வு கிடைப்பதில்லை. ரயில்வே இன்ஜினை ஆப்ரேட் செய்வதில் ரொம்பக் கவனமாக இருக்கணும். அப்படியிருக்க கொஞ்சம் கண் அசந்தா அவ்ளோதான். எனவே, வாரத்திற்கு 6 நாள்களாக உள்ள இரவுப்பணியை 2 நாள்களாக மாற்றி, மீதமுள்ள நாள்களில் பகல் பணி கொடுக்க வேண்டும். இதுவரைக்கும் நடந்த ரயில் விபத்துகளின் ஆய்வறிக்கைகள், 99 சதவிகித விபத்துகள் காலை 3 முதல் 6 மணிக்குள்தான் நடக்கின்றன என்று சொல்கின்றன. எனவே ஓட்டுநர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.