வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (15/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (15/03/2018)

`மக்களின் எண்ணங்களை உணர்ந்து செயலில் பிரதிபலிப்பவர்!’ - பட்ஜெட் உரையில் ஈ.பி.எஸ்ஸை புகழ்ந்த ஓ.பி.எஸ்

மக்களின் எண்ணங்களை உணர்ந்து, தனது செயலில் பிரதிபலிப்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எனத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். 

2018-19-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைத் துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். புதிய வரிகள் ஏதும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தப் பட்ஜெட்டில் அதிகபட்சமாகக் கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கப்பட்டது. பட்ஜெட் உரையின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்து தள்ளினார். 

அவர் பேசுகையில், ``எளிமையானவரும் பரந்த அனுபவ அறிவும் வாய்ந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பதில் சிறப்பாக வழிகாட்டியுள்ளார்கள். அவர் மக்களின் எண்ணங்களை உணர்ந்து தனது செயலில் பிரதிபலிப்பவர். அவரது வழிகாட்டுதலில் வகுக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கை பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, மாநிலத்தின் வளத்தைப் பெருக்க வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்குவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தந்த வழிகாட்டுதலுக்கும் ஆதரவுக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.