வெளியிடப்பட்ட நேரம்: 00:54 (16/03/2018)

கடைசி தொடர்பு:07:56 (16/03/2018)

நெல்லை வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிவர் கைது!

நெல்லை மாவட்ட வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய நபரை வனத்துறையினர் பிடித்து விசாரித்துவருகின்றனர். தப்பியோடிய மற்றொரு நபரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 

உடும்பு வேட்டை

நெல்லை மாவட்ட வனப்பகுதியில், அரிய வகை விலங்கினங்களை சிலர் வேட்டையாடிவருவதாக வனத்துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து, வனப்பகுதியில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பணகுடி வனப் பகுதியில், வனவர் சண்முகம், வனக் காப்பாளர் குமார் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு நபர்கள் சாக்குப் பையுடன் வந்தார்கள். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார்கள்.

அதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையைக் கைப்பற்றி சோதனையிட்டதில், அதில் அரிய வகை வன உயிரினமான உடும்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். உடனடியாக ஒருவர் அங்கிருந்து காட்டுக்குள் ஓடித் தப்பினார். மற்றொருவரைப் பிடித்து விசாரித்ததில், அவரது பெயர் முத்துராஜ் என்பதும் பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தப்பியோடியவர், முத்துராஜின் மகன் ஜெகன் என்பதும் தெரியவந்தது.

முத்துராஜிடமிருந்து இரண்டு மயில் முட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டன. இதுதொடர்பாக முத்துராஜ் கைதுசெய்யப்பட்டார். அவரது மகன் ஜெகன் மீது பணகுடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்டுவருகிறார். வனப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனவர் சண்முகம் தெரிவித்துள்ளார். அத்துடன், வனப் பகுதியில் விலங்கு வேட்டையைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.