'கருப்பன்' காளையைக் காண வந்த டி.டி.வி.தினகரன்! - களைகட்டிய பிடாரம்பட்டி கிராமம்

கடந்த ஜனவரி 15-தேதி அன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்று முதல் பரிசாக காரை பெற்ற காளையையும் அதன் உரிமையாளரையும் நேரில் பார்த்து பாராட்டினார் டி.டி.வி.தினகரன். மாட்டின் உரிமையாளர் தினகரன் ஆதரவாளர் என்பதால், அதன் உரிமையாளருக்கு அந்தக் கார் வழங்கப்படவில்லை. சிறந்த காளை என்ற சிறப்புப் பரிசை மட்டும் பெற்றது. இந்த விஷயம்  அப்போது பரபரப்புடன் பேசப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம்  பொன்னமராவதி அருகே உள்ளது,  ஏனாதி பிடாரம்பட்டி கிராமம். இங்கு வசிக்கும்  மலையாண்டி என்பவரும் அவர் வளர்க்கும் கருப்பன் என்ற காளையும் செம பிரபலம். அந்தக் காளையை நேரில் பார்ப்பதற்காக டி.டி.வி.தினகரன் நேற்று (14.03.2018.) இரவு வந்தார். இந்த  மலையாண்டி ஒரு விவசாயி. அத்துடன் தீவிர ஜல்லிக்கட்டு ஆர்வலர். ஐந்துக்கும்  மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை இவர் வளர்த்துவருகிறார்.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், மதுரை, திருச்சி, கேவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், இவர் வளர்க்கும் காளை மாடுகள் கலந்துகொண்டு, பல பரிசுகள் மற்றும் தங்க நாணயங்களுடன் வெற்றியையும் பாராட்டையும் பெற்றுவருவது மட்டுமே வழக்கம்.

அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த காளை என வெற்றியும் பெற்றது.  இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், டி.டி.வி தினகரன் 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்னும் கட்சியின் புதிய பெயரை அறிவித்து, முதல் கூட்டத்தையும் நடத்திமுடித்தார். நேற்றிரவு அவர், மன்னார்குடி போவதாகவும் போகிற வழியில் ஏனாதி பிடாரம்பட்டியில் உள்ள கட்சியின் தீவிர தொண்டரான விவசாயி மலையாண்டியின் வீட்டுக்குச் சென்று, ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற கருப்பன் காளையைப் பார்க்க விரும்பினார்.

அதன்படியே, மாயாண்டி குடும்பத்தினரைச் சந்தித்தார். கருப்பனைப் பார்த்து, அதனுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார். கிட்டத்தட்ட அரைமணிநேரம் மாயாண்டி வீட்டில் இருந்தார். அவர் வந்திருக்கும் தகவல் தெரிந்ததும் ஊர் பொதுமக்கள் வீட்டுக்கு முன்பாகத் திரண்டு விட்டனர். அவர்களில் சிலர், 'அடுத்த முதலமைச்சர் நீங்கதான். இரட்டை இலையும் ஒங்களுக்குத்தான்' என்று சத்தமிட்டுக் கூறினார்கள். தினகரன் வழக்கம்போல தனது ட்ரெண்ட்டிங் சிரிப்புடன் அங்கிருந்து கிளம்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!