திருச்செந்தூரில் பங்குனி உத்திரத் திருவிழா!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு  இம்மாதம் வரும் 30-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இரவில் சுவாமி – அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

trichendur subramaniyaswamy kovil

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரையோர தலமுமானது  திருச்செந்தூர்  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக் கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் பங்குனி உத்திரத் திருவிழாவும் ஒன்று. இந்த வருடம், பங்குனி உத்திரத் திருவிழா வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, அதிகாலையில் 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, 5.30 மணிக்கு வள்ளி அம்பாள், தபசுக்கு புறப்படுதல் நடைபெறுகிறது. மதியம் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்றும் மாலை 4.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கப் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து, பந்தல் மண்டபம் முகப்பில், சுவாமி – அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து,  சுவாமி – அம்பாள் ரத வீதிகளில் உலா வருதல் நடைபெறுகிறது.

இரவு 7.30 மணிக்கு 108 மகா தேவர் சன்னதி முன்பு சுவாமி – அம்பாளுக்கு கெட்டிமேளம் முழங்க திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றைய தினம், இரவில் மூலவருக்கு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இதேபோல,  இக் கோயிலின் உப கோயிலான, நாலுமூலைக்கிணறு, அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலிலும், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு அபிசேகம், அலங்கார தீபாராதனை  நடைபெறுகிறது.   உத்திரத் திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் குழுவினர்  செய்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!