வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (16/03/2018)

கடைசி தொடர்பு:11:05 (17/03/2018)

`கதிர்வீச்சுக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது!' - ஆர்.டி.ஐ தகவலால் அதிரும் கல்பாக்கம்

சென்னை அணுமின் நிலையம்

சென்னை அணுமின் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களாக உலையை நடத்த முடியாமல் தவிக்கின்றனர் விஞ்ஞானிகள். காரணம், அணு உலையில் ஏற்பட்ட கதிர்வீச்சுக் கசிவு. 'கசிவுக்கான காரணங்களைக் கண்டறிந்துகொண்டிருக்கிறோம் என ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளது இந்திய அணுசக்திக் கழகம். குஜராத் அணு உலையில் ஏற்பட்ட அதே சூழலை, சென்னை அணுமின் நிலையம் சந்தித்திருக்கிறது' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

காஞ்சிபுரத்தில் உள்ள கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 220 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், அணுஉலையின் அலகு 1-ல் குளிர்விக்கப் பயன்படும் தண்ணீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டதாகக் கூறி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கதிர்வீச்சின் அளவு அதிகமானதாலேயே அணு உலை நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. "பொதுவாக, அணு உலை அமைந்துள்ள பகுதியில் உள்ள கதிர்வீச்சின் அளவு டி.ஏ.சி/ஹவர் என்ற அலகால் அளக்கப்படும். அதன்படி, கதிர்வீச்சுக் கசிவின் அளவு 1,000 DAC/Hour என்பதை எட்டிவிட்டால், அங்கு அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என்பது விதி. உலை நிறுத்தப்பட்ட அன்று அணுக் கதிர்வீச்சு 200 DAC/hour என்பதில் தொடங்கி 1,000 DAC/hour என்ற அளவு வரை தொடர்ந்து அதிகரித்திருக்கிறது.

இதனாலேயே, அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சாதாரண தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அணு உலையில் நிறுத்தப்பட்டிருப்பதாக நிர்வாகம் கூறி வருகிறது. இந்திய அணுசக்தித்துறை வரலாற்றிலேயே முதல்முறையாக அணுக்கதிர் வீச்சுக் கசிவுக்கான காரணம் என்ன என்றும்; எந்தப் பகுதியில் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்க முடியாமல் நிர்வாகம் திணறிவருகிறது. அணுக்கதிர் வீச்சு அபாய அளவை எட்டியும் அவசரநிலை பிறப்பிக்கப்படவில்லை. அதேபோல், கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கும்போது அதை அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விதியையும் கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் காற்றில் பறக்கவிட்டுள்ளது" என ஆதங்கப்பட்டனர் சூழல் ஆர்வலர்கள். 

கதிர்வீச்சு ஆர்.டி.ஐ தகவல்

இந்நிலையில், இந்திய அணுசக்திக் கழகத்திடம் ஆர்.டி.ஐ மூலம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார் வழக்கறிஞர் வெங்கடேசன். அவர் தன்னுடைய மனுவில், 'சென்னை அணுமின் நிலையம் அலகு 1-ன் இயக்கத்தை நிறுத்த வேண்டிய காரணம் என்ன; பிரச்னை என்னவென்று அறிந்துகொள்ளப்பட்டதா என விளக்கம் அளிக்கவும்; பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் என்ன. கதிர்வீச்சின் அளவு வழக்கமான அளவைவிட உயர்ந்துள்ளதா... ஆம் எனில், எவ்வளவு உயர்ந்துள்ளது - எந்தெந்த இடங்களில்; முதலில் 200 (DAC Hour) என இருந்த கதிர்வீச்சு சில தினங்களுக்குள் ஐந்து மடங்கு உயர்ந்து 1,000 (DAC Hour) என உயர்ந்தது உண்மைதானா. 1,000 DAC hour என இருந்ததால் தொழில்நுட்ப விதிகளின்படி அவசர நிலை (Plant emergency) பிரகடனப்படுத்தப்பட்டதா; கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டு ஒரு வாரத்துக்கு மேலாகியும் எங்கிருந்து, எதனால் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மையா; கதிர்வீச்சுக் கசிவை சரிசெய்ய இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை. சென்னை அணுமின் நிலையம் 1-ல் புகைப் போக்கி வழியாக எவ்வளவு கதிர்வீச்சு சம்பவ தினத்திலிருந்து (8.1.2018) இன்றுவரை வெளியேற்றப்பட்டது. அது பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட (271 Curie) அதிகம் இருந்ததா; சென்னை அணுமின் நிலையம் 1-ஐ சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களுக்கு புகைபோக்கி வழியாக வெளியிடப்பட்ட கதிர்வீச்சு பாதிப்பின் காரணமாகச் சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படா வண்ணம் என்ன தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன - என 10 கேள்விகளை முன்வைத்திருந்தார். 

இதற்கு இந்திய அணுசக்திக் கழகம் பதில் கொடுத்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் விவரித்தார் சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தை நடத்தி வரும் புகழேந்தி. அவர் நம்மிடம் பேசும்போது, "அணுஉலையில் கதிர்வீச்சுக் கசிவு இருப்பதை கல்பாக்கம் விஞ்ஞானிகள் கண்டறிந்துவிட்டனர். ஆனால், எங்கிருந்து கதிர்வீச்சுக் கசிவு வருகிறது என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஆர்.டி.ஐ மூலம் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு கடந்த 6.3.2018 அன்று இந்திய அணுசக்திக் கழகத்தினர் பதில் கொடுத்தனர். அதில், மூன்றாவது கேள்வியான, 'கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டதற்கான மூலத்தைக் கண்டுபிடித்தார்களா, எங்கிருந்து கதிர்வீச்சு கசிகிறது' எனக் கேட்டபோது, 'கசிவைக் கண்டுபிடிப்பதற்கான பணிகள் இன்னும் நடந்துகொண்டிருக்கிறது' எனப் பதில் கொடுத்துள்ளனர். அப்படியானால், 60 நாள்கள் கடந்தும் இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதானே உண்மை. கசிவு ஏற்பட்ட பிறகும் ஒரு வார காலம் அணு உலையை நடத்தியுள்ளனர். காரணத்தைக் கண்டறியாமல், உலையை இயக்கியது எந்த வகையிலும் சரியானதல்ல. இதனால், அதிகப்படியான கதிர்வீச்சுப் பாதிப்புகள்தான் ஏற்படும். இதில் கொடுமை என்னவென்றால், கதிர்வீச்சுக் கசிவைக் கண்டறிந்த பிறகு அந்தப் பகுதியை வெட்டிப் பரிசோதனை செய்வதற்காக 27 லட்ச ரூபாய்க்கு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். காரணம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே 27 லட்ச ரூபாய்க்கு டெண்டர் விட்டதற்கான மர்மம்தான் புரியவில்லை. இதற்கும் அவர்களிடமிருந்து பதில் இல்லை. 

கதிர்வீச்சு கசிவு ஆர்.டி.ஐ தகவல்

'அணுஉலையில் பிரச்னை வரலாம்' என்பதை முன்கூட்டியே கண்டறிந்து உலையின் இயக்கத்தை நிறுத்துவதை 'திட்டமிட்ட மூடல்' என்கிறார்கள். ஆனால், தென்மண்டலத்தில் உள்ள அணு உலைகளின் அன்றாட செயல்பாடுகளை விவரிக்கும் எஸ்.ஆர்.எல்.டி.சி தளத்தில், சென்னை அணுமின் நிலைய உலையை, அவசர பராமரிப்பு காரணமாக மூடியதாகக் கூறுகிறார்கள் (Forced). எதிர்பாராத சிலவற்றால் பிரச்னை நிகழ்ந்தால்தான் இவ்வாறு கூற முடியும். சென்னை அணுமின் நிலையம் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் எஸ்.ஆர்.எல்.டி.சி தளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் முன்கூட்டியே கசிவைக் கண்டறிந்திருந்தால், பராமரிப்பு என்றுதான் பதியப்பட்டிருக்கும். இதைப் பற்றி ஆர்.டி.ஐ வழியாகக் கேட்டபோதும் உண்மையான தகவலை அவர்கள் தெரிவிக்கவில்லை. எஸ்.ஆர்.எல்.டி.சி சொல்வது உண்மையா, அணுமின் நிர்வாகம் சொல்வது உண்மையா என்பதை மேல்முறையீட்டில் கேட்க இருக்கிறோம். 

புகழேந்திமேலும், 'கதிர்வீச்சு கசிவின் அளவு எவ்வளவு. இதை அளந்தார்களா' எனக் கேட்டபோது, 'கதிர்வீச்சில் வித்தியாசம் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அளவு எவ்வளவு என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. அடுத்ததாக, 'இதை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' எனக் கேட்டதற்கும் முறையான பதில் இல்லை. 'டிலேய்டு நியுட்ரான் மானிடரிங் ட்யூபில் சிக்கல் வந்தது. அதைச் சரிசெய்துவிட்டோம்' எனக் கூறிவிட்டு தொடர்ந்து உலையை இயக்கியுள்ளனர் விஞ்ஞானிகள். இது வெளியில் தெரிந்தால் சிக்கல் வந்துவிடும் என்பதால்தான் மௌனம் காக்கின்றனர். கசிவைக் கண்டறிவதற்காக உலையின் 16 பாயிண்டுகளில் 12-ல் சோதனை நடத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.

எரிபொருள் இருக்கக்கூடிய மூன்று பகுதிகளான பி 10, கியூ 9, கியூ 10 ஆகியவற்றில் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் எந்த உண்மையையும் அவர்களால் கண்டறிய முடியவில்லை. ஒருநாள் அணு உலையை இயக்கவில்லையென்றால், அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். தற்போது வரையில் 60 கோடி ரூபாய் நஷ்டமாகியுள்ளது. அதே ஆர்.டி.ஐ கேள்வி ஒன்றில், 'கதிர்வீச்சை அடைத்துவிட்டீர்களா' எனக் கேட்டதற்கு, 'கதிர்வீச்சு கசிவு இல்லை' எனப் பதில் அளித்துள்ளனர். இது முழுக்கத் தவறான தகவல். ஆர்.டி.ஐ கேள்விக்கு அவர்கள் கொடுத்த பதிலில், டி.ஏ.சி அளவு 40-ல் தொடங்கி 160 வரை கூடியுள்ளது எனக் கூறியுள்ளனர். கதிர்வீச்சு கூடாமல் இது எப்படி சாத்தியமாகும்? 

'புகைபோக்கியின் வழியாக, 9-ம் தேதியிலிருந்து தற்போது வரையில் எவ்வளவு கதிர்வீச்சு வெளியேற்றப்பட்டது' என்ற கேள்விக்கு, 'பரிந்துரைக்கப்பட்டதைவிட குறைவாகத்தான் கதிர்வீச்சு உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எவ்வளவு எனத் தெரிவிக்கவில்லை. குஜராத், காக்ரபாரில் உள்ள அணுஉலையில் மார்ச் 11, 2016-ம் ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. 'எங்கிருந்து கசிவு வருகிறது?' என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால், 'அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உலையை இயக்க முடியாது' என அணுசக்தி ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டு வாரியமே கூறிவிட்டது. கல்பாக்கத்திலும் கதிர்வீச்சுக்கான காரணத்தைக் கண்டறிய முடியாமல் 60 நாள்களாக விஞ்ஞானிகள் திணறி வருகின்றனர். அணுசக்தி கழகமும் எஸ்.ஆர்.எல்.டி.சி இணையதளமும் தெரிவிக்கும் முரண்பாடான கருத்துகள், மக்கள் மத்தியில் அச்சத்தைதான் விதைத்துள்ளது" என்றார் விரிவாக. 

இதுகுறித்து, சென்னை அணுமின் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரிகளிடம் பேசினோம். "இது வழக்கமான ஷட் டவுன்தான். பராமரிப்புப் பணிகள் அங்கு நடந்து வருகின்றன. வேறு எந்தவிதச் சிக்கல்களும் இல்லை. விரைவில் மின் உற்பத்தி தொடங்கும்" என்றதோடு முடித்துக் கொண்டனர்.


டிரெண்டிங் @ விகடன்