பளபளக்கும் அரசு அலுவலகம்! ஆச்சர்யப்படவைத்த பெண் அதிகாரி

 பல ஆண்டுகளாக முள்புதர்களும், கழிப்பிடம் மற்றும் குடிமகன்களின் நவீன பார் போன்றும் முறையான பராமரிப்பின்றி செயல்பட்டு வந்த அரசு அலுவலகம் ஒன்று, நம்பமுடியாத அளவுக்கு ஒரு பெண் அதிகாரியால் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.

அரசு வட்டார வளமையம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், வட்டார வள மைய அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இதன் முக்கிய நோக்கமே அனைவருக்கும் கல்வித் திட்டம் என்பதை முழுமையாக நிறைவேற்றுவதுதான். மாவட்டத்தில் உள்ள எல்லா ஒன்றியத்திலும் இதற்கென்று தனியாக அலுவலகம் இருக்கும். பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பில்லாத துறை இது. அந்த ஒன்றியத்தில் உள்ள அத்தனை வகை அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குத் தன்முனைப்பு விஷயங்களைக் கூட்டம் போட்டு கற்றுத்தருவது, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட நிறையத் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் இங்கு வேலைபார்க்கும் அதிகாரியின் பணி. இப்படிப்பட்ட அலுவலகங்கள், பொதுவாகவே முகம் சுளிக்கவைக்கும் நிலைமையில்தான் இருக்கும். அறந்தாங்கி வட்டார வள மைய அலுவலகமும் அப்படித்தான் இருந்தது.


பெண் அதிகாரி சிவயோகம்

ஆனால், இந்த அலுவலகத்தின் மேற்பார்வையாளராக சிவயோகம் என்ற பெண் அதிகாரி பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, இந்த அலுவலகத்துக்கு யோகம் அடித்தது. வளாகமே படு சுத்தமாகக் காட்சிதருகிறது. கழிப்பறை, மணமூட்டி உதவியோடு மணக்கிறது. அலுவலகம் ஒழுங்கு மற்றும் புதிப் பொலிவு பெற்றுவிட்டது. சிவயோகத்தின்  ஆர்வம் மற்றும் பணி ஈடுபாடு காரணமாக, இன்று இந்த அலுவலகம் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாறி இருப்பதாக, உடன் பணியாற்றும் ஊழியர்கள் இவரைப் பாராட்டுகிறார்கள். 'எனது அலுவலகம்...எனது இல்லம்' என்கிற விதமாக, அலுவலக வளாகப் புனரமைப்பின் அத்தனை செலவையும் தான் ஒருவரே ஏற்றுக்கொண்டு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு அலுவலகம்

அவரிடம் இதுகுறித்த கேட்டபோது, "தலைமைப் பொறுப்பிற்கு வரும் ஒருவர், முன்மாதிரியாகச் செயல்படுவது எல்லோருக்கும் தூண்டுகோலாக அமையும். மாற்றம் என்பது நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்பதை எனது ஆசான்களும் பெற்றோரும் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே வாழ்ந்தும் இருக்கிறார்கள். அவர்களிடம் கற்றுக்கொண்டதை இங்கு செயல்படுத்தினேன்" என்றார்.

இவரது செயல்பாட்டை நேரில் பார்த்து வியந்த 'கல்வியாளர்கள் சங்கமம்' என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், வட்டார வள மையத்தின் வளாகத்தில் தோட்டம் அமைப்பதற்குத் தேவைப்படும் செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாகக் கூறி, அதற்கான வேலைகளைப் பார்க்கும்படி ஊக்கம் தந்திருக்கிறார்.

கழிப்பறை

தன் அலுவலகத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அதிகாரியின் கடமை என்றாலும்கூட, அதைச் செய்பவர்களைக் காண்பதே அபூர்வமாக இருக்கும் இன்றைய சூழலில், சிவயோகம் மாதிரியான  பெண் அலுவலர்களின் முயற்சியைப் பாராட்டுவது, அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!