சிலை கடத்தல்காரனை சிக்கவைத்த சந்தேகம்! | Statue theft caught by police

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (16/03/2018)

கடைசி தொடர்பு:13:10 (16/03/2018)

சிலை கடத்தல்காரனை சிக்கவைத்த சந்தேகம்!

திருடப்படும் சிலைகள் நீண்ட நாள்களுக்குப் பிறகு மீட்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயில் வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த சிலை, திருடுபோன அடுத்த சில நிமிடங்களிலேயே மீட்கப்பட்டது.

சந்தேகத்தால் சிக்கிய கடத்தல்காரன்

தாராசுரம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்டெடுக்கப்படும் சிலைகள், ஐராதீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இக்கோயிலுக்கு வந்த இளைஞர் ஒருவர், இங்கிருந்த அம்மன் சிலையைப் பையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு கோயிலின் வாசல் பகுதிக்கு வந்திருக்கிறார். இங்கிருந்த கடைக்காரருக்கு அந்த இளைஞர் மேல் சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததோடு, அவர் வைத்திருந்த பையையும் பரிசோதித்திருக்கிறார். சிலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடைக்காரர், சிலை திருட்டு இளைஞரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

’சிலை திருடியவர் திருவாரூர் மாவட்டம் வடவாறு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை உடனே விடுவித்துவிட்டோம் எனக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். சமீபகாலமாக சிலை திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. ஆனாலும்கூட கோயில் நிர்வாகமும் தமிழக அரசும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவே இல்லை.