வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (16/03/2018)

கடைசி தொடர்பு:15:09 (16/03/2018)

சாலையோர முதியோரை கண்கலங்கவைத்த டிராஃபிக் காவலர்! வைரலாகும் வீடியோ

 போக்குவரத்து  காவலர்

சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில், முதியவர் ஒருவருக்கு போக்குவரத்துக் காவலர் உதவி செய்யும் வீடியோ வைரலாகிவருகிறது. 

சென்னையின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான மயிலாப்பூர் லஸ் கார்னரில், முதியவர் ஒருவர்  பசி மயக்கம், அரைநிர்வாணத்திலிருந்த அவரைப் பார்த்த போக்குவரத்துக் காவலர் ஒருவர், அவரிடம் பேசுகிறார்.  அவருக்கு டீ, பன் வாங்கிக் கொடுக்கும் காவலர், அடுத்து, அவரது மானம் காக்க, அருகில் உள்ள கடையிலிருந்து  புதிய லுங்கி ஒன்றையும் வாங்கிக் கொடுக்கிறார். எதேச்சையாகச் செய்த இந்த உதவியை, சிக்னலுக்காகக் காத்திருந்த ஒருவர், செல்போனில் வீடியோ எடுக்கிறார். அதை, சமூக வலைதளத்திலும் பதிவுசெய்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த பலர், போக்குவரத்துக் காவலரின் மனிதநேயத்தை வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். உயரதிகாரிகளிடமிருந்தும் போக்குவரத்து காவலருக்கு பாராட்டும் வாழ்த்துகளும் குவிகின்றன.

 இந்தத் தகவல் கிடைத்ததும், யார் அந்த போக்குவரத்துக் காவலர் என்று விசாரித்தோம். அவரது பெயர் அந்தோணி ஃபிராங்க்ளின் என்று தெரியவந்தது. நெல்லை மாவட்டம், வள்ளியூரைச்  சேர்ந்தவர். இவர், தமிழக காவல்துறையில் சேர்ந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்புப் பணி, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணி ஆகியவற்றோடு, சமூக சேவையிலும் ஈடுபட்டுவருகிறார். 

 அந்தோணி ஃபிராங்க்ளினிடம் பேசினோம். "கோட்டூர்புரம் போக்குவரத்து போலீஸ் பிரிவிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மயிலாப்பூருக்கு இடமாற்றத்தில் வந்தேன். எனக்கு, நேற்று லஸ் கார்னர் பகுதியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, சிக்னலுக்காக வாகனங்கள் காத்திருந்தன. அதற்கு நடுவில் பசி மயக்கத்தில் தள்ளாடியபடி முதியவர் ஒருவர் அழுக்குத்துணியோடு வந்தார். சட்டை மட்டுமே அவர் அணிந்திருந்தார். அவரை இதற்கு முன்பு நான் பார்த்துள்ளேன். அப்போதெல்லாம் பேன்ட் அணிந்திருப்பார். ஆனால், நேற்று அவர் அரைநிர்வாணத்தில் இருந்தார். அதைப் பார்த்த எனக்கு மனதேவதனையாக இருந்தது. உடனே, அருகில் உள்ள கடையில் லுங்கி ஒன்றை வாங்கி அவருக்கு உடுத்திவிட்டேன். அதோடு,  டீ, பன், தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன். பசி மயக்கத்திலிருந்து மீண்ட அவருக்கு உணவும் வாங்கிக் கொடுத்தேன். வழக்கமாக நான் பணியாற்றும் இடங்களில் இதுபோன்ற சிறு உதவிகளைச் செய்வதுண்டு. 

 போக்குவரத்துக் காவலர்

பணி முடிந்து தேனாம்பேட்டையில் உள்ள போலீஸ் குடியிருப்புக்குச் சென்றபோதுதான், போலீஸ் உயரதிகாரி ஒருவர் என்னை போனில் அழைத்து வாழ்த்துச் சொன்னார். அவர் எதற்காக வாழ்த்துச் சொன்னார் என்ற விவரம் தெரியாமல் அவரிடமே விளக்கம் கேட்டேன். அப்போதுதான் அவர், முதியவருக்கு உதவியதும், அது வீடியோவாக சமூகவலைதளத்தில் வலம் வருவதுகுறித்தும் தெரிவித்தார். அதோடு, அந்த வீடியோவையும் எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவைத்தார். அதைப் பார்த்த நான் உணர்ச்சிவசப்பட்டேன். அதன்பிறகு பலரிடமிருந்து எனக்கு வாழ்த்துமழை வந்தவண்ணம் உள்ளது. இன்று காலையில்கூட கீழ்ப்பாக்கம் போக்குவரத்து துணை கமிஷனர் ராஜேந்திரன், என்னை நேரில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார். கமிஷனர் அலுவலகத்திலிருந்தும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். 

 போக்குவரத்துக் காவலர்

போக்குவரத்துக் காவலர் உதவிசெய்த முதியவரின் பெயர் தெரியவில்லை. அவர் தெலுங்கில் பேசுகிறார். அந்தப் பகுதியில் சுற்றித்திரியும் அவர், பசி எடுத்தால் லஸ் கார்னர் பகுதிக்கு வருவது வழக்கம். அவருக்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் போலீஸார், உணவு வாங்கிக் கொடுப்பதுண்டு என்கின்றனர் லஸ்கார்னர் போக்குவரத்து போலீஸார். 

 'போலீஸ் உங்கள் நண்பன்' என்று எவ்வளவோ தமிழக காவல்துறை விழிப்பு உணர்வு செய்தாலும், நடக்கும் சம்பவங்கள் போலீஸாருக்கு எதிரான மனப்பான்மையையே உருவாக்குகின்றன. சென்னை தரமணியில், கால்டாக்ஸி டிரைவர் மணிகண்டனின் மரணம்,  திருச்சி  உஷா மரணம் என சமீபத்திய நிகழ்வுகள் போக்குவரத்து போலீஸாருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் மனிதநேயத்துடன் முதியவருக்கு உதவிய போக்குவரத்துக் காவலரின் செயல், பாராட்டுக்குரியது.

வீடியோவை காண க்ளிக் செய்க...