`சிறை கையேடு 459-ன்படி சசிகலா மூன்றாம்வகை குற்றவாளி!' - சத்ய நாராயணராவ் வாக்குமூலத்தின் முழு விவரம்

வினய்குமார் கமிஷன்

சிகலாவுக்குச் சிறையில் செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து வெளியாகும் தகவல்களால், சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. `அரசு விருந்தினர் மாளிகைக்கு என்னை அழைத்தார் முதல்வரின் உதவியாளர். அங்கு சென்றபோது, சசிகலாவுக்குச் சிறப்பு வசதிகள் செய்து தருமாறு கூறினார்' என வினய் குமார் கமிஷன் முன்பாக சிறைத்துறை டி.ஜி.பியாக இருந்த சத்யநாராயண ராவ் தெரிவித்த கருத்துகள் புயலைக் கிளப்பியுள்ளன. 

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியாகப் பொறுப்பேற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடி சோதனையை மேற்கொண்டார். இதில், சிறைத்துறை விதிகளை மீறி சசிகலாவுக்குச் சலுகைகள் செய்து தரப்படுவதாகக் குற்றம் சுமத்தினார். `இதற்காக, டி.ஜி.பி சத்யநாராயண ராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார்' என அதிரவைத்தார். இதனை எதிர்பார்க்காத சத்யநாராயண ராவ், பெண் அதிகாரி ரூபா மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், `விதிகளை மீறி சலுகை வழங்கப்பட்டதா?' என்பதைக் கண்டறிய ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் கமிட்டி அமைத்து உத்தரவிட்டார் முதல்வர் சித்தராமையா. இந்த அறிக்கையின் விவரங்கள் வெளியானதால், கூடுதல் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார் சித்தராமையா.

வினய்குமார் அறிக்கை

சிறைத்துறையில் நடந்த குளறுபடிகள் குறித்து பேட்டியளித்த பா.ஜ.க எம்.பி ஷோபா கரல்தலாஜே, ' சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயண ராவ், வினய்குமார் கமிஷன் முன்பு தெளிவாக உண்மையைக் கூறிவிட்டார். முதல்வர் சித்தராமையாவின் அறிவுறுத்தலின் பேரில் சசிகலாவுக்கு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இது தற்போது பிரச்னையாக மாறிவிட்டதால், சத்யநாராயண ராவ் மீது ஏசிபி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை  அளிக்கப்படுவதற்காக முதல்வர் சித்தராமையா பெற்ற கைம்மாறு என்ன என்பதை  வெளிப்படையாகக் கூறவேண்டும்' எனக் கொதித்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், கட்சிக்கு ஏற்பட்ட சோதனையாக இதனைக் கருதுகிறது காங்கிரஸ் கட்சி மேலிடம். 

வினய்குமார் கமிஷன் முன்பாக, சத்யநாராயண ராவ் அளித்த பிரமாண பத்திரத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறிய முயற்சி செய்தோம். நம்மிடம் கிடைத்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்கள் இவைதாம்....! 

வினய்குமார் அறிக்கை

` சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா சிறையில் அடைக்கபட்ட பிறகு, `அவருக்குச் சிறையில் முதல் வகுப்பு வசதிகள் கொண்ட அறை வேண்டும்' எனச் சிறைத்துறை அதிகாரிக்கு ஒரு கடிதம் வந்தது. இதைப் பற்றி தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார் அந்த அதிகாரி. அவரிடம் நான் பேசும்போது, ' சிறை கையேடு எண் 459-ன்படி மூன்றாம் வகை குற்றவாளிகளுக்கு அவ்வாறு எந்த வசதிகளும் செய்து தர முடியாது' எனக் கூறினேன். `நீதிமன்றம் அவருக்கு எந்தச் சிறப்பு வசதிகளும் வழங்கக் கூடாது' என அறிவித்திருந்தது. அதன்படி அவருக்கு எந்த வசதிகளும் செய்து தரவில்லை. பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள பெண்களுக்கான பிரிவின், முதல்மாடியில் உள்ள ஒரு தனி அறையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார். பிறகு, மீண்டும் சிறைத்துறை அதிகாரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு அளிக்கும்படி கேட்கப்பட்டிருந்தது. இதனை சிறைத்துறை அதிகாரி என்னிடம் தெரிவித்தார். நான் அந்தத் தகவலை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அங்கிருந்து எனக்கு எந்தப் பதில்களும் வரவில்லை.

சசிகலாஅதன்பிறகு, ஒருநாள் கே.பி.சி விருந்தினர் இல்லத்துக்கு வருமாறு முதல்வர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது. அங்கு என்னைச் சந்தித்த முதல்வரின் உதவியாளர் வெங்கடேஷ், `சசிகலாவுக்கு எந்த மாதிரியான சலுகைகள் வழங்கப்படுகின்றன?' என்று கேட்டார். அதற்கு நான், `அவருக்கு எந்தச் சலுகைகளும் வழங்கப்படவில்லை. அவரும் மற்ற கைதிகளைப் போலவேதான் நடத்தப்படுகிறார்' எனக் கூறினேன். தொடர்ந்து என்னிடம் பேசிய வெங்கடேஷ், `சசிகலாவுக்கு ஒரு கட்டில், மெத்தை மற்றும் தலைகாணி மட்டும் வழங்குங்கள்' எனக் கூறினார். முதல்வர் தரப்பினர் சொன்னதன் பேரில் அவருக்கு ஒரு கட்டில், மெத்தை, தலைகாணி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதன்பிறகு, சசிகலாவுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகின்றன எனத் தனிப்பட்ட முறையில் கண்காணித்தேன். அவருக்கு அதிகப்படியான எந்தச் சலுகைகளும் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, சசிகலாவைக் கண்காணித்துத் தினமும் பதிவு செய்யுமாறு சிறைத்துறை பெண் அதிகாரி அனிதாவிடம் தெரிவித்தேன். அவர் அளித்த தகவலின்படி சசிகலா மீது எந்தப் புகாரும் வரவில்லை. 

சிறைச்சாலைக்கு நீதிபதிகள், சிறைத்துறை உறுப்பினர்கள், அரசியல் சார்பற்றவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் எனப் பலரும் வருவார்கள். சசிகலாவுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கபடுவதாக எனக்கு எந்தவிதப் புகார்களும் வரவில்லை. பெண்கள் சிறையில் அதிரடி விசிட் செய்தபோதும், சசிகலாவின் அறையிலோ, இளவரசியின் அறையிலோ எந்தவிதச் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். சிறப்புச் சலுகைகள் வழங்குமாறு எந்த அதிகாரிக்கும் நான் உத்தரவிடவில்லை' என விளக்கமளித்திருக்கிறார். இதன்பிறகு, சிறையில் ஆய்வு நடத்த வந்தபோது, இரண்டு சி.சி.டி.வி கேமிராக்களும் ஜாமர்களும் இயங்கவில்லை என்ற தகவல் உங்கள் கவனத்துக்கு வந்ததா எனக் கேட்டபோது, `இதுதொடர்பாக, சிறைத்துறை அதிகாரி எனக்கு அனுப்பிய தகவலை நான் அரசிற்கும், இசிஐஎல்-க்கும் அனுப்பியுள்ளேன்' எனத் தெரிவித்தார். தொடர்ந்து, சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் அருகில் உள்ள மற்ற அறைகளில் யாரையும் அனுமதிக்காதது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்த சத்ய நாராயணராவ், `சசிகலா, இளவரசி ஆகியோருக்கு ஓர் அறை மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு நலன் கருதியே மற்ற அறைகளில் மற்றவர்களை அனுமதிக்கவில்லை' எனக் கூறியிருக்கிறார். 

`வினய்குமார் கமிஷன் அறிக்கையின் தாக்கம் என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பது, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவில் தெரியவரும்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!