வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (16/03/2018)

கடைசி தொடர்பு:13:28 (16/03/2018)

புழல் சிறையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் முதியவர்..!

சென்னைப் புழலில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 67 வயதுடைய முதியவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 48,119 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர். இதில் மாணவர்கள் 24,249 பேர்.
பெண்கள் 23,870 பேர். இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு  35 நாள்கள் தேர்வு நடக்கிறது. அதாவது இன்று தொடங்கும் தேர்வு ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ் முதல்தாள் தேர்வுக்குப்பின் நான்கு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன் பிறகு 20-ம் தேதி தமிழ் இரண்டாம் தாள். அதன்பிறகு ஏழு நாள்கள் விடுமுறைக்கு பிறகு 28-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 4-ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், ஏப்ரல் 10-ம் தேதி கணக்கு, ஏப்ரல் 17-ம் தேதி அறிவியல், ஏப்ரல் 29-ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. "தமிழக தேர்வுத்துறை வரலாற்றில் பத்தாம் வகுப்பு தேர்வை அரசு 35 நாள்கள் நடத்தியதே இல்லை" என்கின்றனர் ஆசிரியர்கள்.

அந்த மாவட்டம் முழுவதும், 159 தேர்வு மையங்கள் 18 வினாத்தாள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 3,138 பேர் தேர்வு மைய
அறை கண்காணிப்பாளர்களாகவும் 324 பேர் பறக்கும் படை அமைப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும் மாணவர்கள்
ஷு அணிந்து வர, செல்போன் கால்குலேட்டர் எடுத்து வரவும் தடை விதிக்கப்ட்டுள்ளது. வினாத்தாள் அவுட்டாகாமல் இருக்க தேர்வு நடக்கும் மையத்துக்கு அருகில் உள்ள இன்டர்நெட் மையங்கள், ஜெராக்ஸ் கடைகளை மூட கலெக்டர் சுந்தரவள்ளி உத்தரவிட்டுள்ளார்.  மேலும், புழல் சிறையில் மொத்தம் 95 ஆண் கைதிகள் தேர்வு எழுதுகின்றனர். இதில் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 67 வயதுடைய முதியவர் சேட்டு என்பவரும் தேர்வு எழுதி வருகிறார்.