``18,000 கி.மீ பயணித்து கின்னஸ் சாதனை படைப்பேன்!’’ - இந்தியாவைச் சுற்றும் சைக்கிள் தமிழன்

நாம் மூன்று கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினாலே மூச்சுத்திணறி நிறுத்திக்கொள்கிறோம். ஆனால், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன் என்கிற இளைஞர், ஒரு நாளைக்கு 150 முதல் 200 கிலோமீட்டர் தூரம் சர்வசாதாரணமாக சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். கின்னஸ் சாதனைக்காக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சுற்றி, ஒரு வருடத்தில் 30,000 கிலோமீட்டர், இலக்கோடு தன் சைக்கிள் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். சைக்கிள் பயணத்துக்கிடையில் அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

சைக்கிள்

``நான், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி திருநகர் பகுதியில் குடியிருக்கிறேன். அப்பா பேரு பங்காருசாமி. அம்மா பேரு ஜெயா. என்கூட பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். நான் சேலம் சீரகாப்பாடியில் உள்ள இராஜாஜி பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தேன்.

ஊடகத் துறையில் ஆர்வம் இருந்ததால் மீடியாவில் சேர்ந்து தமிழகம் முழுவதும் சென்று 5000-க்கும் மேற்பட்ட நேரலை நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். இதற்கிடையில் எனக்கு சிறு வயதிலிருந்தே சைக்கிள் பயணம் ரொம்பப் பிடிக்கும். என் பள்ளி, கல்லூரிக் காலங்களில் மோட்டார் இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தாமல், சைக்கிளையே அன்றாடம் பயன்படுத்தக்கூடியவனாக இருந்தேன். ஒரு கட்டத்தில் ஊடகத் துறை வெறுப்படைந்ததையடுத்து, ஒரு லட்சியத்தை நோக்கி நகர முடிவெடுத்தேன்.

சைக்கிள் தமிழன்

என்னுடைய 21-வது வயதிலிருந்து பேருந்து, ரயில் மூலம் இந்தியாவை 14 முறை சுற்றியிருக்கிறேன். அதன் விளைவாக இயற்கையை நேசிக்கத் தொடங்கினேன். வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, சைக்கிள் விழிப்புஉணர்வுப் பயணத்தை மேற்கொண்டேன். மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு சைக்கிளில் சென்று இளைஞர்களையும் கல்லூரி மாணவ, மாணவிகளையும் சந்தித்து `Save cycle, Save petrol, Save nature'  என்ற ஸ்லோகத்துடன் விழிப்புஉணர்வு பிரசாரம் செய்தேன்.

அதன் தொடர்ச்சியாக இதே பிரசாரத்தை மேற்கொண்டு கடந்த 2017-ம் ஆண்டு மே 10-ம் தேதி  உத்ராஞ்சலில் உள்ள ஹரிதுவாரிலிருந்து என் சைக்கிள் பயணத்தைத் தொடங்கி டேராடூன், சிம்லா, குலுமணாலி, ஹெலாங், காஷ்மீரில் உள்ள லே வரை தனியாகச் சென்று  ஜூன் 21-ம் தேதி பயணத்தை நிறைவுசெய்தேன். இந்தப் பயணத்தில் 30 நாள்களில் 1,780 கிலோமீட்டர் கடந்தேன். நான் சென்ற சிம்லா டு காசா பாதை, லேசான காற்று வீசினால்கூட மண்சரிவுகளோடு கற்களும் உருண்டு வந்து ஆட்களைக் காயப்படுத்துவதுடன், மண்ணுக்குள் புதைத்துவிடும். இந்தப் பாதை இந்தியாவிலேயே மிக மோசமான பாதையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பயணத்தில் கிடைத்த வெற்றி, இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் செய்ய வேண்டும் என்ற என்னுடைய 15 ஆண்டுகாலக் கனவுக்கு அச்சாரமாக அமைந்தது. அதையடுத்து இந்தியா முழுவதும் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினேன்.  ஒரு வருடத்தில் 30,000 கிலோமீட்டர் இலக்கோடு  2017 அக்டோடர் 2, காந்தி ஜெயந்தி அன்று சைக்கிள் பயணம் தொடங்கியது. கடந்த ஐந்து மாதங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் போன்ற ஏழு மாநிலங்களைக் கடந்து 13,700 கிலோமீட்டர் சென்றிருக்கிறேன். இந்தப் பயணத்தை 2018 செப்டம்பரில் முடித்துவிடுவேன். எனக்கு தற்போது 48 வயதாகிறது. இந்த வயதில் நான் சைக்கிள் ஓட்டிச் செல்வதைப் பார்த்து பலரும் ஆச்சர்யப்படுகிறார்கள்.

ராஜன்

ராஜஸ்தானைச் சேர்ந்த ரானா என்பவர், 18,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அந்தப் பயணத்தை முறியடித்து நான் புதிய கின்னஸ் சாதனை படைப்பேன். என்னுடைய சைக்கிள் பயணத்தில் நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. இந்தப் பயணத்தை நிறைவுசெய்த பிறகு, புத்தகமாக எழுத  தீர்மானித்திருக்கிறேன். நான் பயன்படுத்தும் சைக்கிள்  ரேஸர் வகையானது. சைக்கிளின் எடை வெறும் 8 கிலோ. சைக்கிளின் விலை 37,000 ரூபாய் மதிப்புடையது.

சைக்கிள்

இந்த சைக்கிள் பயணத்தில் செல்லும்  இடமெல்லாம், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புஉணர்வு ஏற்படுத்திச் செல்கிறேன். ஒரு நாளைக்கு சுமார் 150 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வரை பயணிப்பேன். கின்னஸ் சாதனைக்கான இந்த சைக்கிள் பயணத்துக்கு மட்டும் 7 லட்சம் ரூபாய் செலவு ஆகும். ஒரு சைக்கிள் பயணிக்கு நிச்சயம் பணம் மிக முக்கியம். பணம் இல்லையென்றால், பயணம் தடைபடும். நான் பயணிக்கும் பாதையில் உள்ள பெட்ரோல் பங்க், பள்ளிக்கூடம், கோயில் போன்ற பொது இடங்களில் டென்ட் போட்டு இரவு தூங்கிவிட்டு காலை 5 மணிக்குப் பயணத்தைத் தொடங்கி இரவு 8 மணி வரை பயணம் செய்வேன். என்னுடைய எதிர்கால லட்சியம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சைக்கிள் க்ளப் உருவாக்க வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!