12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு! | Swimming team breaks record

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (16/03/2018)

கடைசி தொடர்பு:15:05 (16/03/2018)

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!

சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனைப் பகுதி வரையிலான கடல் பரப்பை,  தமிழக ரயில்வே பாதுகாப்புக் காவல் படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு தலைமையிலான குழுவினர், இன்று நீந்திக் கடந்துள்ளனர்.

பாக் நீரிணை கடல் பகுதியில் நீந்திய வீரர்கள்

பல்வேறு நாடுகளில் கடல் பரப்பே இல்லாத நிலையில், தமிழகத்தில் மட்டும் 1,074 கி.மீ தூரத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நீச்சல் மற்றும் கடல் நீர் விளையாட்டுப் போட்டிகள், குறைவாகவே நடத்தப்படுகின்றன. நீச்சல் மற்றும் கடல் நீர் விளையாட்டுப் போட்டிகளில், தமிழகக் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஈடுபடுவதன்மூலம், சர்வதேச அளவில் சாதனைகள் பல படைக்க வாய்ப்புள்ளது.

இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள், கடலோரப் பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள், ஆர்வத்துடன் பயன்படுத்த அவர்களைத் தூண்டுதல் படுத்தும்விதமாக, வங்கக்கடலின் பாக் நீரிணைப் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை இடையேயான கடல் பரப்பை நீந்திக் கடக்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு ரயில்வே பாதுகாப்புப் படையின் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு தலைமையில், மாநில தேசிய நீச்சல் வீரர்கள் 18 பேர் இந்த நீச்சல் போட்டியில் பங்கேற்றனர்.

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் கரையேறிய சைலேந்திரபாபு உள்ளிட்ட நீச்சல் வீரர்கள்

சுமார் 12 கி.மீ தூரம் உள்ள இந்த கடல் பகுதியை, 2 மணி 44 நிமிடங்களில் கடந்த நீச்சல் குழுவினர், இன்று காலை 10 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையை வந்தடைந்தனர். ஏற்கெனவே, தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான கடல் பகுதியைப் பலர் தனித்தனியாக நீந்தி சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து தனுஷ்கோடி வரை முதன் முறையாகக் குழுவாக  நீந்தி சாதனை படைத்துள்ளனர்.