வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (16/03/2018)

கடைசி தொடர்பு:15:19 (16/03/2018)

`திராவிடம் இல்லாமல் கட்சிப் பெயரா?!' - தினகரனோடு மோதிய நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

தினகரனின் புதிய கட்சித் தொடக்கவிழாவைப் புறக்கணித்துவிட்டார் நாஞ்சில் சம்பத். `குரங்கணி தீ விபத்தில் என்னுடைய உறவினர் இறந்துவிட்டார். இதுதான் காரணம் என்றாலும், புதிய கட்சியின் பெயரில் எனக்கு உடன்பாடில்லை' என்கிறார் நாஞ்சில் சம்பத். 

மதுரை மேலூரில் கடந்த 15-ம் தேதி, `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை அறிவித்தார் டி.டி.வி.தினகரன். 108 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றியபோதும் மேடையில் கட்சியின் நிர்வாகிகள் பேசியபோதும், அந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்தின் முகம் தென்படவில்லை. திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்ட காலத்திலிருந்து மாவட்டம்தோறும் கூட்டங்களை நடத்தி வந்த சம்பத், புதிய கட்சியின் தொடக்க விழாவில் தென்படாமல் இருந்ததை ஆச்சர்யத்துடன் கவனித்தனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சம்பத்தின் ஆதரவாளர் ஒருவர், "குரங்கணி தீ விபத்தில் அவருடைய உறவினர் இறந்துவிட்டதால் வரவில்லை என்பதுதான் வெளியில் சொல்லப்படும் தகவல். ஆனால், கடந்த சில நாள்களாக தினகரனுடன் அவருக்கு மோதல் வலுத்து வருகிறது. புதிய அமைப்பின் தொடக்கவிழா ஏற்பாட்டின்போது, `மேடையில் தினகரன்தலைவருக்கு மட்டும்தான் இருக்கை போடப்பட்டுள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால், முன்வரிசையில் அமரலாம்' எனக் கூறிவிட்டனர். இதில் மிகுந்த கோபத்துக்கு ஆளாகிவிட்டார் சம்பத். 

மேலூர் கூட்டத்துக்கு வருமாறு பத்து முறைக்கும் மேல் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். கட்சிப் பெயரில் திராவிடம் இல்லாமல் இருப்பதை அவர் விரும்பவில்லை. அம்மா கொடுத்த இன்னோவோ காரை, தலைமைக் கழகத்தில் ஒப்படைத்துவிட்டார். கார் இல்லாமல்தான் வெளியூர்களுக்குப் பயணிக்கிறார். அவருக்கு ஒரு வாகனம் வாங்கித் தர வேண்டும் என்ற எண்ணம்கூட தினகரன் தரப்பினருக்குத் தோன்றவில்லை.

புதிய அமைப்பில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை அவருக்குத்தான் கொடுக்க வேண்டும். அதைப் பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. தமிழ்நாடு முழுக்க பேச்சுப் பயிற்சியை வளர்க்கும் பணி  ஒன்றைச் செய்யவிருக்கிறார். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். `திராவிடம் என்ற பெயர் இல்லாமல் கட்சி இருக்கலாமா? இதற்குத்தான் நான் வரவில்லை. நான் வெளியில் போகவில்லை; மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறேன்' என எங்களிடம் தெரிவித்தார் சம்பத். நாங்களும், `உங்களை நம்பித்தான் இந்தக் கட்சியில் இருக்கிறோம். அதை மறந்துவிட வேண்டாம்' எனக் கூறினோம். இதனை சம்பத்தும் மௌனமாகக் கேட்டுக்கொண்டார்" என்றார். 

நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம். "என்னுடைய மைத்துனர் மகன் குரங்கணி காட்டுத் தீயில் கருகி இறந்து போனான். விபின் சந்திரபால் என்கிற அவன் இறந்த துக்கத்தில் மைத்துனரும் சொந்தங்களும் இருந்தனர். அவர்களுடன் நான் இருந்தேன். என் கண் முன்னால் வளர்ந்த பையன் அவன். அவனுடைய மனைவியும் இறந்துவிட்டார். அதனால்தான் வர இயலவில்லை. கட்சியின் பெயரில் எனக்கு உடன்பாடில்லை என்பது உண்மைதான். ஆனால், கூட்டத்துக்கு வராததற்கு அது காரணமல்ல" என்றார் நிதானமாக. 


டிரெண்டிங் @ விகடன்