வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (16/03/2018)

கடைசி தொடர்பு:18:10 (16/03/2018)

பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்

ஊர்மக்கள் சீர்வரிசை

அரசுப் பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி போன்ற பொருள்கள் தேவையென்றால் அரசு அதிகாரிகளையே எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் சீர்வரிசையாக அனைத்துப் பொருள்களையும் கொடுத்துவிடுகிறார்கள்.

''தங்கள் ஊர் பள்ளிக்கூடம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இங்குள்ள மக்களும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களும் கடந்த சில ஆண்டுகளாக இந்த உயரிய வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இவர்களின் பங்களிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது'' என்று இப்பள்ளியின் ஆசிரியர்கள் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள். இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள பொருள்களை சீர்வரிசையாக வழங்கியுள்ளார்கள். 125 நாற்காலிகள், 20 வட்ட வடிவ மேஜைகள், பீரோ, கால்டுலெஸ் மைக், பேனா, பென்சில், குப்பைத்தொட்டி உள்ளிட்ட பொருள்கள் இந்தச் சீர் வரிசையில் இடம்பெற்றுள்ளன.