ஆள்பவர்களுக்கு எங்கள் கண்ணீர் நனைத்த கண்டனங்கள்... மக்கள் நீதி மய்யம் சரமாரி கேள்வி?

 தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பற்றி மக்கள் நீதி மய்யம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. 

நேற்று தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, இதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. நிதி நிலை அறிக்கை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தனது கருத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பட்ஜெட் பற்றி சிறிது ஆய்வு செய்ய வேண்டி இருந்ததனால் கருத்துகளைத் தாமதமாக வெளியிடுகிறோம். தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெரும்பாலும் சென்ற ஆண்டின் நகலே உள்ளது. விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்களுக்குச் சிறப்பான திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தில் வேலை தேடுபவர்கள் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். அதில் கடந்த 7 ஆண்டுகளில் வெறும், 4 லட்சம் இளைஞர்கள் மட்டுமே திறன் பெற்றுள்ளனர், அதிலும் 1 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் எங்கே? 

 

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு சென்ற ஆண்டு அறிவித்த தொகைபோல் இந்த ஆண்டு அறிவித்திருப்பதும் கானல் நீராய் போய்விடுமோ.  27,000 கோடி ரூபாய் பள்ளிக்கல்விக்கு செலவழித்த பின்னரும் தமிழக மாணவர்கள், தமிழ் உட்பட அனைத்து பாடங்களிலும் தேசிய சராசரியைவிடப் பின் தங்கியிருக்கிறார்கள் இதுதான் அமைச்சர்கள் கூறும் சிறந்த கல்வியா. நிதிநிலை அறிக்கையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு எந்த அறிவிப்பும் இல்லையே ஏன். காணாமல்போன 1,000 சிலைகள்போல் துறையும் காணாமல் போய்விட்டதோ. ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் 45,000 ரூபாய். இந்த எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவர்களுக்கு எங்கள் கண்ணீர் நனைந்த கண்டனம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!