`திராவிட நாடு அமையும் நம்பிக்கையில் இருக்கிறேன்' - மு.க.ஸ்டாலின் | eps - ops must see chandrababu naidu - stalin speaks

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (16/03/2018)

கடைசி தொடர்பு:18:45 (16/03/2018)

`திராவிட நாடு அமையும் நம்பிக்கையில் இருக்கிறேன்' - மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின்

"தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து திராவிட நாடு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்" என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோடு பெருந்துறையை அடுத்த சரளை பகுதியில் தி.மு.க மண்டல மாநாடு நடைபெறவிருக்கிறது. அதற்கான  பணிகள் விறுவிறுப்பாக பிரமாண்டமான முறையில் நடைபெற்றுவருகின்றன. தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் மாநாட்டுத் திடலைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்தநிலையில், இன்று ஈரோட்டுக்கு வருகைதந்த செயல்தலைவர் ஸ்டாலின், மாநாட்டு வளாகத்தில் புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஸ்டாலின், “இது மண்டல மாநாடாக இருந்தாலும், மாநில மாநாட்டை விஞ்சக்கூடிய அளவுக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் மற்றும் 100 அடி அகலத்தில் மாநாட்டு மேடை, 300 ஏக்கரில் கார் பார்க்கிங் ஆகியவை அமைக்கப்பட்டிருக்கிறது. 1 1/2 லட்சம் மக்களுக்கு அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், மாநாட்டுப் பந்தலைச் சுற்றி 5 லட்சம் பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திராவிட இயக்கத்தின் வரலாறுகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் புகைப்படக் கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது” என்றார்.

பா.ஜ.க குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த குற்றச்சாட்டு சம்பந்தமாகப் பத்திரிகையாளார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “மத்தியில் பிரதமராக இருக்கக்கூடிய மோடி கொடுத்த எந்த உறுதிமொழிகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, எனவே, இனியும் கூட்டணியில் இருப்பது முறையல்ல. இனி பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளார். இதுசம்பந்தமாக அவர்களுடைய கட்சியின் சார்பில் இருந்த மத்திய அமைச்சர்கள் பதவி விலகியிருக்கின்றனர். இந்த உணர்வு, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்-க்கும் வரவில்லையே என்பதுதான் வேதனையாக இருக்கிறது. ஏனென்றால், நீட் தேர்வு, காவிரிப் பிரச்னை என மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களையும் விவசாயிகளையும் வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. அதையெல்லாம் தட்டிக்கேட்க இந்தக் குதிரை பேர ஆட்சி, சந்திரபாபு நாயுடுவைப் பார்த்தாவது திருந்துவார்களா” என்று கேள்வியெழுப்பினார்.

ஸ்டாலின்

தொடர்ந்து பேசியவர், “சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வருவது வரவேற்கத்தக்கது. விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தோம். இந்தக்கருத்தை ஏற்க அ.தி.மு.க முன் வந்தால் அதைப் பின்பற்ற தி.மு.க தயாராக இருக்கிறது” என்றார்.

அத்திக்கடவு - அவினாசி திட்டம் குறித்து பதிலளித்த ஸ்டாலின், “ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போதே அத்திக்கடவு - அவினாசி திட்டம் குறித்து பல உறுதிமொழிகள் தரப்பட்டன. 110 விதியைப் பயன்படுத்தி பல அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து இதைத்தான் சொல்லி வருகின்றனர். இதை நிறைவேற்ற வேண்டும் என எண்ணியிருந்தால் எப்பொழுதோ நிறைவேற்றியிருக்க முடியும். ஆக, இப்போதாவது நிறைவேற்றுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சி கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் என்றுதான் இயங்கிவருகிறது” என்றார்.

தென் மாநிலங்கள் ஒன்றிணைந்து திராவிட நாடு அமைய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பதாகத் தெரிகிறதே என்ற கேள்விக்கு, ''வந்தால் வரவேற்கப்படும். வரும் என்ற நம்பிக்கையில், நான் இருக்கிறேன்'' என்று கூறினார்.