வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (16/03/2018)

கடைசி தொடர்பு:19:40 (16/03/2018)

தரையில் அமரவைக்கப்பட்ட தமிழக மாணவர்கள்! சர்ச்சையில் பத்மநாபபுரம் அரண்மனை விழா!

பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனையில் புதிய டிக்கெட் கவுன்டர் திறப்புவிழா அழைப்பிதழில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெயர் இடம்பெறவில்லை. பா.ஜ.க.வினர் போராட்டத்தை தொடர்ந்து கேரள அரசு அழைப்பிதழ் புதிதாக அச்சடித்த சம்பவம் நடந்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கேரள அரசுக்குச் சொந்தமான அரண்மனை சுமார் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த இந்த அரண்மனை குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தபோது கேரள அரசு வசம் சென்றது. இந்த அரண்மனை முழுவதும் மரத்தில் கலை பணிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. கேரள பாரம்பர்யத்தின் சின்னமாக ஓடுகளால் வேயப்பட்ட இந்த அரண்மையில் திருவிதாங்கூர் மன்னர்கள் பயன்படுத்திய பொருள்கள், கற்சிலைகள், போர் காலங்களில் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவை இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

கேரளம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த அரண்மனையை சுற்றிப்பார்க்க வருகின்றனர். தொல்லியல் சம்பந்தமாக ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களும் இந்த அரண்மணைக்கு அதிகமாக வருகின்றனர். இந்த அரண்மனையில் புதிய டிக்கெட் கவுன்டர், பூங்கா என ரூ.2.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட திட்டங்களின் திறப்பு விழா நேற்று நடந்தது. கேரளத் துறைமுகம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கடன்னம்பள்ளி ராமச்சந்திரன் கலந்துகொண்ட இந்த விழா அழைப்பிதழில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தது. உள்ளூர் எம்.பியும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பெயர் அழைப்பிதழில் இடம்பெறாததால் குமரி பா.ஜ.க.வினர் கோபமடைந்தனர். பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் குமரி ப.ரமேஷ் தலைமையில் நேற்று (15.03.2018) அன்று அரண்மனை முன் போராட்டம் நடத்த முற்பட்டனர். இதையடுத்து அரண்மனை அதிகாரிகள் பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் பழைய அழைப்பிதழை மாற்றி புதிய அழைப்பிதழ் தயாரிக்கப்பட்ட பிறகே பா.ஜ.க.வினர் அமைதியடைந்தனர்.

அரண்மனை

இன்று (16.03.2018) காலையில் நடந்த திறப்பு விழாவில் கேரளத் துறைமுகம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கடன்னம்பள்ளி ராமச்சந்திரன் கலந்துகொண்டு புதிய கட்டடங்களை திறந்துவைத்தார். நெய்யாற்றின்கரை எம்.எல்.ஏ-க்கள் கே.ஆன்சலன், பாறசாலை எம்.எல்.ஏ. சி.கே.ஹரீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அழைப்பிதழ் மாற்றி அச்சடித்த பிறகும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லை. அதிலும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

புதிய திட்டங்களை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த கேரளத் துறைமுகம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் பேசுகையில், "பத்மநாபபுரம் அரண்மனையை யுனஸ்கோவின் உலகப் பாரம்பர்ய கட்டடங்களின் பட்டியலில் இணைக்கும் முயற்சி நடந்து வருகின்றன. அதற்கான முதல் லிஸ்டில் வந்திருக்கிறது. இந்த முயற்சியை வெற்றிபெறவைக்கும் விதமாக அரண்மனை குறித்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த முயற்சியாக 360 டிகிரி கோணத்தில் பத்மநாபபுரம் அரண்மனையைப் பார்க்கும் வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரண்மனையைச் சுற்றி பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது" என்றார்.

தமிழக மாணவர்கள்

கேரளத்தில் அரசு விழாக்களில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துவது இல்லை. தமிழக அரசு விழாக்களில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தி வருவது அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் கேரள அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கும் விழா நடந்தது. இதில் பத்மநாபபுரம் அரண்மனை அருகே அமைந்திருக்கும் கல்குளம் அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து கூட்டம் சேர்த்திருந்தனர். அதுமட்டுமல்லாது யூனிஃபாமில் வந்திருந்த மாணவர்களுக்கு இருக்கை வழங்கப்படாமல் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அதிலும் முழு ஆண்டு தேர்வு காலத்தில் மாணவர்களை அரசு விழாவில் கலந்துகொள்ள செய்தது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அங்கு வந்திருந்த கேரளத் துறைமுகத் தொல்லியல் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சரும் கண்டுகொள்ளவில்லை. கேரள அரசு விழாவில் தமிழக மாணவர்களை கலந்துகொள்ளவைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.