நீட், காவிரி விவகாரங்களில் மோடிக்கு சவால் விடுவாரா எடப்பாடி பழனிசாமி..?

எடப்பாடி பழனிசாமி

பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிய நிலையில், இன்று, அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொருளாதார ரீதியில் பாதிப்புக்குள்ளான ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. தனி மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு ஆதரவாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ், மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கத் தயார் என்று ஏற்கனவே சந்திரபாபு நாயுடு அறிவித்தார். 

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. 282 இடங்களில் வெற்றிபெற்றது. பின்னர், நடந்த சில தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்துள்ள பி.ஜே.பி-க்கு மக்களவையில் தற்போது 273 எம்.பி-க்கள் உள்ளனர். மேலும், மொத்தமுள்ள 543 இடங்களில் 7 தொகுதியில் காலியாக உள்ளன. ஆக, இப்போதுள்ள 536 உறுப்பினர்களில் 269 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே அக்கட்சி மெஜாரிட்டி பெற்றுவிடும். ஆனால், பி.ஜே.பி-க்கு அதற்கும் கூடுதலாகவே எம்.பி.க்கள் உள்ளனர். எனவே, ஆட்சியைத் தக்கவைப்பதற்குப் போதிய அளவிலான பெரும்பான்மை உள்ளது. இந்நிலையில், மக்களவையில் 37 எம்.பி-க்களைக் கொண்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க துணிச்சலாக தெலுங்கு தேசம் கட்சியைப் போன்று முடிவு எடுத்தால் மத்திய அரசு ஆட்டம் கண்டுவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர், ''தமிழகத்துக்கு மத்திய பி.ஜே.பி. அரசு மிகப்பெரும் துரோகம் இழைத்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்து, அத்தேர்வை அமல்படுத்தாமல் அமைதியாக இருந்த மத்திய ஆட்சியாளர்கள், அவரின் மறைவுக்குப் பிறகு நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவித்தனர். தமிழகச்  சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக இரண்டுமுறை தீர்மானம் நிறைவேற்றியும் பலன் இல்லாமல் போய்விட்டது. மேலும், காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவது போன்று மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து அரசியல் 'சடுகுடு' ஆடுகிறது பி.ஜே.பி. இதை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இப்போது, காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தோடு நிற்காமல், அதை நிறைவேற்ற நெருக்கடி கொடுக்க வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர்களையும் சேர்த்தால் மொத்தம் 50 எம்.பி-க்களுடன் பெரிய கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. நினைத்தால் மத்திய அரசை இப்பிரச்னையில் வழிக்குக் கொண்டுவர முடியும். எனவே, மத்திய அரசுக்குத் தேவையான நெருக்கடியைக் கொடுக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், தமிழக அரசின் தயவில்தான் மத்திய பி.ஜே.பி. அரசு உள்ளது'' என்றார். 

ஸ்டாலின்ச்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் பேசுகையில், ''ஆந்திர மாநிலத்திற்கு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, சந்திரபாபு நாயுடு கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கிறார். அக்கட்சியின் மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்து விட்டனர். கூட்டணியிலிருந்து விலகியது மட்டுமல்ல; மத்திய அரசுக்கும் இனி ஆதரவில்லை என்று திட்டவட்டமாக சந்திரபாபு நாயுடு அறிவித்துவிட்டார். இந்த உணர்வு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவில்லையே என்பதுதான் வேதனையாக இருக்கிறது. 

காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு, தமிழக விவசாயிகளையும், தமிழக மக்களையும் வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. நீட் பிரச்னையில் எவ்வளவு மோசமாக மத்திய அரசு நடந்துகொண்டிருக்கிறது? தமிழகத்தில் இப்போது ஆட்சி நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கு, சந்திரபாபு நாயுடுவைப் போன்று உணர்வு ஏற்பட வேண்டும். தமிழக ஆட்சியாளர்கள் இதை உணருவார்களா என்பதை எனது கேள்வியாக வைக்கிறேன். நீட் நுழைவுத்தேர்வு பிரச்னை அப்படியேதான் இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் அரசியலுக்காகச் சொல்லவில்லை. தமிழ மக்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும். அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதைச் சொன்னேன். அதை அ.தி.மு.க. ஏற்றுக்கொண்டு செயல்பட முன்வந்தால் தி.மு.க-வும் அதைப் பின்பற்றத் தயாராக இருக்கிறது'' என்றார்.

தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவருமான மு.தம்பிதுரை, ''உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. அ.தி.மு.க. எம்.பி-க்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் குரலைப் பதிவுசெய்ய அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஓங்கி ஒலிக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் சொன்ன காலக்கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் முடிவு செய்வோம். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து, இன்னும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. போதிய விளக்கமும் இல்லை. ஆனால், பி.ஜே.பி. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் வாக்கெடுப்பு நடக்கும்போது, ஆதரவு யாருக்கு என்பதை அ.தி.மு.க முடிவு செய்யும்'' என்று தெரிவித்தார்.

முன்னாள் எம்.பி-யும், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளருமான கோவை கே.சி.பழனிசாமி, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்கும்'' என்றார். தமிழக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன், ''நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி கட்சி மேலிடமே முடிவெடுக்கும்'' என்றார். ஆனால், இப்படியொரு முடிவை ஆதரித்தால் பி.ஜே.பி. ஆட்சி கவிழ அதிக வாய்ப்பு இருக்கிறது.

நீட் தேர்வு ரத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதைச் செய்வாரா முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி..?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!