சத்தீஸ்கரிலிருந்து அரிசி இறக்குமதி... நெற்களஞ்சியமான தஞ்சையின் அவலநிலை! | Thanjavur imports rice from Chattisgarh

வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (16/03/2018)

கடைசி தொடர்பு:21:35 (16/03/2018)

சத்தீஸ்கரிலிருந்து அரிசி இறக்குமதி... நெற்களஞ்சியமான தஞ்சையின் அவலநிலை!

ரு காலத்தில் நாட்டுக்கே உணவு கொடுத்தது, நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம். இன்றைக்கும் உணவு படைக்க அங்கே காத்திருக்கின்றன லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள். ஆனால், இன்றைய யதார்த்த நிலையோ நெஞ்சை கனமாக்குகிறது. தற்பொழுது வெளிமாநிலத்திலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் இங்குள்ள விவசாயிகளின் நெஞ்சில் ஈட்டிபோல் பாய்ந்துள்ளது.

அரிசி

தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரேசன் கடைகள் மூலமாக விநியோகம் செய்ய 3660 டன் அரிசி சதீஸ்கர் மாநிலத்திலிருந்து ரயில் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உலகுக்கே சோறு போட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ஏன் இந்த அவலநிலை? மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என, யானை கட்டி போர் அடித்த சோழநாடு அது. 'சோழநாடு சோறுடைத்து...' என்றெல்லாம் புகழப்பட்ட புண்ணிய பூமிக்கா இந்தப் பரிதாப நிலை?

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் என அழைக்கப்படும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள கிராமங்களில் முப்போகமும் பசுமைப் போர்வை போர்த்திருந்தது. ஆண்டுக்கு 25 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி நடைபெற்றது. ஓர் ஏக்கருக்கு மூவாயிரம் கிலோவுக்கும் மேல் நெல் விளைந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு நெல் ஏற்றுமதி செய்யப்பட்டது. விவசாயிகள் வளமான வருமானம் எடுத்து, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். விருந்தோம்பலில் உலகுக்கே உதாரணமாய் திகழ்ந்தார்கள். அன்னையாக, அமுதசுரபியாக, அன்னபூரணியாக தானியங்களை வாரி வழங்கி, செழிப்பான வாழ்க்கையைக் கொடுத்தது காவிரி.

1970-களில் கர்நாடக அணைகளில் காவிரி தாய் சிறை வைக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது நெற்களஞ்சிய பூமியின் இருண்டகாலம். காவிரி தண்ணீர் கிடைக்காததால் பல ஆண்டுகள் குறுவை சாகுபடி நடைபெறவே இல்லை. கடந்த 20 ஆண்டுகளாகச் சம்பா சாகுபடியும் பரிதாப நிலைக்குச் சென்றது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு 18 லட்சம் ஏக்கரில் நடைபெற்ற சம்பா சாகுபடியின் பரப்பு, தண்ணீர்ப் பற்றாக்குறையின் காரணமாகப் படிப்படியாகக் குறைந்து 10 லட்சம் ஏக்கராகச் சுருங்கிப் போனது. கடந்த ஆண்டு நிலைமை இன்னும் மோசம். 2016-17 ஆண்டு தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்ற சம்பா சாகுபடி பரப்பு வெறும் 3 லட்சம் ஏக்கர் மட்டுமே. இவற்றிலும் கூட பெரும்பகுதி வறட்சியில் கருகிப்போனது. நூற்றுக்கும் அதிகமான விவசாயிகளின் உயிர்கள் வறட்சிக்குத் தாரை வார்க்கப்பட்டது.

அரிசி

நெல் சாகுபடி வெற்றிகரமாக நடைபெற்றால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக, விவசாயிகளின் நெல்லைக் கொள்முதல் செய்து, முகவராகச் செயல்பட்டு இந்திய உணவு கழகத்திற்கு அரிசியாகக் கொடுக்கும். இதற்கான செலவை இந்திய உணவுக் கழகம் கொடுக்கும். தமிழ்நாட்டில் உள்ள குடோன்களிலேயே இருப்பு வைக்கப்பட்டும் அரிசியை, தமிழ்நாடு அரசு விலை கொடுத்து வாங்கும். இதுதான் வழக்கமான நடைமுறை. கடந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி முறையாக நடைபெறாததால், தமிழ்நாட்டில் உள்ள குடோன்களில் போதியளவு நெல் இருப்பு இல்லை. இதனால்தான் இந்திய உணவுக் கழகத்தின் மூலமாக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 3660 டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சம்பா பருவத்தில் மட்டும் ஓரளவுக்கு நெல் சாகுபடி நன்றாகவே நடந்துள்ளது. இதனை விவசாயிகள் அறுவடை செய்து வருகிறார்கள். ஆனால், நெல் கொள்முதலில் தமிழக அரசு முறையான ஆர்வம் காட்டவில்லை. காரணம் மத்திய அரசு தமிழ்நாட்டு நெல் உற்பத்திக்கு முறையான மரியாதை தரவில்லை. மிகவும் குறைவான அளவு நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்திக்கு உத்தரவிட்டுள்ளது. மற்ற மாநிலங்களின் சந்தையாகவே தமிழ்நாட்டைப் பார்க்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக நமது ஆட்சியாளர்கள் உருவாக்க வேண்டும். நம் மாநிலத்திற்குத் தேவையான நெல்லை இங்கேயே கொள்முதல் செய்து அரிசியாக மாற்றி, இங்கேயே ரேசன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இதுபோல் செய்தால்தான், நமது விவசாயிகளின் வாழ்க்கை ஓரளவுக்காவது பாதுகாக்கப்படும். நன்கு மழை பெய்யக்கூடிய ஒரு சில ஆண்டுகளில் மட்டுமாவது, நிறைவான வருமானம் பார்க்க முடியும். 


டிரெண்டிங் @ விகடன்