`டாஸ்மாக் உடம்புக்குக் கேடு இல்லையா?’ - சாலையோரத்தில் கலைஞர்கள் நடத்திய விழிப்பு உணர்வு

கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் அதைக் குடிக்காமல் தடுப்பதற்கும் நடத்தபட்ட விழிப்பு உணர்வு கலை நிகழ்ச்சியில் அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கிறது. அந்த மதுபானத்தை மட்டும் வாங்கிக் குடிக்கலாமா அது உடம்புக்குக் கேடு விளைவிக்காதா எனக் கேட்டு அதிகாரிகளைப் பொதுமக்கள் மிரளவைத்துள்ளனர்.  

விழிப்புணர்வு

தஞ்சாவூரில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கள்ளச்சாரயத்தை ஒழிக்கவும் அதைக் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கிய இந்த விழிப்பு உணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில்  நடத்தப்பட்டது. ஒரு கலைக்குழுவுக்கு 5 கலைஞர்கள் வீதம் மொத்தம் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு தினமும் மூன்று வெவ்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

கலை நிகழ்ச்சி நடத்தப்பட்ட கலைஞர்களிடம் பேசினோம், "பொதுமக்கள் கூடும் இடங்களில் இந்தக் கலைக்குழுக்கள் கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு கள்ளச்சாராயம் குடிப்பதால் குடும்பத்தில் ஏற்படும் விபரீதங்கள், என்ன மாதிரியான பொருள்களைக் கலந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது, அதைக் குடிப்பதால் உடலில் எந்தெந்த உறுப்புகள் பாதிக்கப்படுகிறது என விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசுவோம்.

மாவட்டக் கலை பண்பாட்டுத்துறை மேற்பார்வையில் நடைபெற்ற இந்த விழிப்பு உணர்வு கலைநிகழ்ச்சியில் கலால் துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பல இடங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  இதைக் காண்பதற்கு கூட்டம் கூடியது. மேலும், கள்ளச்சாராயம் குடித்தால் உடம்புக்குக் கேடு தரும். உடல் உறுப்புகள் பாதிக்கும் என்பது சரி,  தமிழக அரசு விற்கும் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கிக் குடிக்கலாமா அது உடம்புக்குக் கேடு விளைவிக்காதா எனப் பல இடங்களில் பொதுமக்கள் அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு மிரளவைத்தனர். இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்து விழித்த அதிகாரிகள் டாஸ்மாக் சரக்கும் உடம்புக்குக் கேடுதான் எனக் கூறி நழுவியுள்ளனர்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!