காப்பாற்றப்பட்ட பிள்ளைகள்... 5 நாள்களுக்குப் பிறகு உயிரிழந்த தாய்... தொடரும் குரங்கணி தீ விபத்து சோகம்! | kurankani fire accident death increased at 16

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (16/03/2018)

கடைசி தொடர்பு:19:04 (16/03/2018)

காப்பாற்றப்பட்ட பிள்ளைகள்... 5 நாள்களுக்குப் பிறகு உயிரிழந்த தாய்... தொடரும் குரங்கணி தீ விபத்து சோகம்!

குரங்கணி தீ விபத்து

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சக்திகலா இன்று உயிரிழந்தார். அவருடன் சேர்த்து இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி சிக்கி படுகாயமடைந்த நபர்களில் சிலர் மதுரையிலுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் இங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை எல்லீஸ் நகரிலுள்ள கெனெட் மருத்துவமனையில் கடந்த மார்ச் 12-ம் தேதி 99% தீக் காயத்துடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற சக்திகலா (40) என்பவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். திருப்பூர் தேக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திகலா. இவர் யோகா ஆசிரியராவார். இவரின் கணவர் சரவணன் லண்டனில் பணியாற்றி வருகிறார். இவர்களின் பெண் குழந்தைகள் பாவனா (12), சாதனா (11) ஆகியோரும் தன் அம்மா சக்திகலாவுடன் இந்த மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றிருந்தனர். அதிர்ஷ்டவசமாக இவர்கள் இருவரும் உயிர் தப்பிவிட்டனர்.

கடந்த ஐந்து நாள்களாகத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரோடு உடனிருந்த கணவர் சரவணன் மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குரங்கணி தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் இறந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 15 பேர் மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (32) கோவை தனியார் மருத்துவமனைக்கும்  சென்னையைச் சேர்ந்த பார்கவி (23) சென்னை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். மேலும், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நிஷா, திவ்யா, கண்ணன், அனுவித்யா, எல்லீஸ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திவ்யா விஸ்வநாதன் ஆகியோரோடு தற்போது சக்திகலாவையும் சேர்ந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 88% தீ காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்த தேவி என்பவர் சிகிச்சை பலன் இன்றி இன்று இறந்தார். தேவி (வயது 26 ), சேலம் எடப்பாடியை சேர்ந்தவர் ஆவார். இதையடுத்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.