அண்ணா டவர் முதல் விமான நிலையம் வரை... மெட்ரோ ரயில் சென்னையில் ஹிட்டா? #SpotVisit

`மெட்ரோபாலிடன் சிட்டியான சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்' என்று பல வருடங்களுக்கு முன்னர் அரசு அறிவித்தது. அன்று முதல் மக்களிடையே அதைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. 2016-ம் ஆண்டு மெட்ரோ சேவை தொடங்கியவுடன், மக்கள் ஆர்வத்துடன் பயணித்தனர். மற்ற போக்குவரத்து வசதியைவிட கட்டணம் அதிகம் என்பதால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் இதைப் பயன்படுத்துவது குறைவே.

மெட்ரோ ரயில்

முதல்கட்டமாக கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் மேம்பாலப் பணிகள் முடிந்த நிலையில், சின்னமலை - விமானநிலையம் மற்றும் ஷெனாய் நகர் - கோயம்பேடு இடையிலான சுரங்கப்பாதை நிறைவுசெய்யும் பணியும் நடைபெற்று, கடந்த மே மாதம் சேவை தொடங்கப்பட்டது. இதையடுத்து, சின்னமலையிலிருந்து கோயம்பேடு வரையில் இரண்டாம்கட்டமாக மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது.

மெட்ரோ சேவை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகியுள்ள நிலையில், தற்போது இந்தச் சேவையைப் பற்றி மக்களின் மனநிலையையும் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையையும் அறிந்துகொள்ள அண்ணாநகர் டவர் முதல் விமானநிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தோம்.

இந்தச் சேவையை தினமும் பயன்படுத்தும் பெண்ணிடம் பேசியபோது, ``நான் மெட்ரோ சேவை தொடங்கியதிலிருந்தே பயன்படுத்திவருகிறேன். பெண்களுக்கு, இது மிகவும் பாதுகாப்பான போக்குவரத்துச் சேவை. இதற்கு முன்னர் பேருந்து மற்றும் மின்சார ரயில் பயன்படுத்தியபோது, அலுவகம் செல்ல சில நேரங்களில் காலதாமதம் ஏற்படும். தற்போது மெட்ரோவைப்  பயன்படுத்துவதால் அலுவகத்துக்கு சரியான நேரத்தில் செல்ல முடிகிறது" என்றார்.

chennai metroமற்றொருவரிடம் பேசியபோது, ``நான் மெட்ரோ ரயிலில்தான் தினமும் பயணம் செய்கிறேன். பெரும்பாலும் தினசரிப் பயன்பாட்டாளர்கள்தான் பயணம் செய்கிறார்கள். ஆனால், வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை கூட்டம் சற்று அதிகமாக இருப்பதைப் பார்க்கிறேன்" என்றார்.

மக்கள் எண்ணிக்கையைப் பற்றி விமானநிலைய நிறுத்தத்தில் பணிபுரியும் அலுவலரிடம் கேட்டபோது, ``இங்கு விமானநிலையம் இருப்பதால், எப்போதுமே மக்கள் கூட்டம் இருக்கும். தினசரிப்  பயன்பாட்டாளர்களுடன்  புதிய பயணிகளும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றனர்" என்றார்.

அதே கேள்வியை அண்ணாநகர் டவர் நிலைய அலுவலரிடம் கேட்டபோது, ``முன்பைவிட மக்கள் கூட்டம் தற்போது 30 முதல் 40 சதவிகிதம் வரை கணிசமாக உயர்ந்துள்ளது. பெரும்பாலும், அலுவலகம் செல்லும் பயணிகளே அதிகம் காணப்படுகின்றனர்" என்றார்.

``அரசு, பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், மெட்ரோ பயன்பாடு உயர்ந்துள்ளதா?'' என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ``பேருந்துக் கட்டண உயர்வால் பெரிய பாதிப்பு ஏதும் தெரியவில்லை. ஆனால், பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்ட நாள்களில் மெட்ரோ ரயில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. வரும் காலத்தில் மெட்ரோ சேவையைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

`மெட்ரோ சேவை தரமாகவும் விரைவாகவும் உள்ளது' என்று சிலர் கூறினாலும், அதற்காகச் செய்யப்படும் செலவு ஆடம்பரமாக உள்ளது என்பதே, சாமானிய மக்களின் கருத்து.

விலையைக் குறைத்தால் மட்டுமே சென்னை மெட்ரோவுக்கு சென்னைவாசிகள் `ஜே' போடுவார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!