வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (16/03/2018)

கடைசி தொடர்பு:22:30 (16/03/2018)

எம்.சி சம்பத்தா.. பாலாஜியா? - குழம்பிப்போன நிர்மலா சீதாராமன்...

அமைச்சர் எம்.சி சம்பத்தை அமைச்சர் பாலாஜி எனக் கூறியதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய விளக்கம் கொஞ்சம் வித்தியாசமானது.

நிர்மலா சீதாராமன்இந்தியப் பாதுகாப்பு வழித்தடம் குறித்த கருத்தரங்கம் திருச்சி சங்கம் ஹோட்டலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் மாவட்ட கலெக்டர் ராசாமணி ஆகியோர் வரவேற்றனர். அதேபோல் பி.ஜே.பி திருச்சி மாவட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

அடுத்து அங்கிருந்து கிளம்பிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையின் சேர்மென் சுனில் குமார் சவுரஸியா, தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பெஞ்சமின், எஸ்.வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இந்தக் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் பெயரைச் சொல்லி பேசும்போது, அமைச்சர் பாலாஜி என்று பேச்சை தொடங்கினார். இதனைப் பார்த்து அமைச்சர் வளர்மதி ஆகியோர் அதிர்ச்சியானார்கள். தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும்போது, மேடைக்குக் கீழே இருந்த பி.ஜே.பி நிர்வாகி ராகவன் ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக்கொடுக்க, பதறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மன்னிப்புக் கேட்டதுடன், எனக்கென்னவோ, சம்பத் பெயர் பாலாஜி என்றே வருகிறது. பாலாஜி என்றாலும் சம்பத் என்றாலும் செல்வம்தான் அதனால் பிரச்னையில்லை எனச் சொல்ல கூட்டமே கலகலத்தது.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன்,

நிர்மலா சீதாராமன்“இந்தத் தொழிற்பேட்டையை, நாற்கர வடிவில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை, ஒசூர், கோவை, சேலம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் இந்த நாற்கரத் தொழிற்பேட்டை அமையும் இதுதொடர்பாக தொழிலதிபர்கள், சிறுகுறு தொழில்முனைவோருடன் ஆலோசனை நடத்தப்படுகிறது, சென்னையில் ஆரம்பித்த ஆலோசனைக்கூட்டம், திருச்சியில் இன்று நடக்கிறது.

தமிழகத்தில் ராணுவ தளவாட பொருள்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதனை தயாரிக்க உள்நாட்டுத் தொழில் முனைவோர்கள் முன்வர வேண்டும். மேலும், தேஜஸ் விமானங்களைப் போர் விமானங்களாகத் தயாரிப்பதைப் போன்று, தனியார் தொழிற்சாலைகள் பங்களிப்புகளுடன் பல தேஜஸ் போர் விமானங்கள் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்கள், பொதுத்துறை ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகளில் இருந்தும், படைக்கலன் தொழிற்சாலைகளில் இருந்தும் பெறப்படுகின்றன. உள்நாட்டுத் தொழிற்சாலைகள் மூலமாக, பீரங்கி வண்டிகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன.

பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்து வழங்குவதில், ராணுவத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தத் தொழிற்சாலைகள், அதிக உற்பத்தித் திறன் கொண்டவை. இந்தத் தொழிற்சாலைகளுக்குப் புத்துயிரூட்ட வேண்டியது அவசியமாகும்.மேலும், ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. மத்திய அரசு எந்தத் தனியார் பெரு முதலாளிகளுக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை. ஆனால், தொழில் முனைவதற்குத் தயாராக உள்ள எந்த சிறு குறு நிறுவனமும் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்த முடியும். ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கப்படுகிறது.

ராணுவத் தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், உத்தரப்பிரதேசத்தை அடுத்து, தமிழகத்தில் சென்னை, ஒசூர், கோவை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களை இணைக்கும் தனி வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத்துறை தளவாடங்களை தயாரிப்பதற்கான இரண்டு தொழிற்பேட்டைகளை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் 5 லட்சம் சதுர அடியில் 180 கோடியில் பாதுகாப்புத்துறை தளவாட தொழிற்பேட்டையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ராணுவத்துக்குத் தேவையான தளவாட பொருள்களை தயாரிப்பதற்குரிய மூலப்பொருள்களின் சேகரிப்பு, அவற்றைத் தயாரிப்பதில் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்களின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க