'மழை ஓய்ந்தது' - சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்குத் தமிழகமெங்குமிருந்து பக்தர்கள் வருகை தருவது உண்டு. கிரிவலம் சென்று வழிபடுவதற்கென சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள். அதன்படி, பிரதோஷ பூஜைக்காக கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வருகை தந்த பக்தர்களை, மழையின் காரணமாக அனுமதிக்கவில்லை. மழை விட்டதால் இன்று அனுமதிக்கப்பட்டனர்.

சதுரகிரி


அமாவசை, பௌர்ணமி பூஜை மற்றும் பிரதோஷ பூஜைகளுக்காக சதுரகிரி மலைக்கு லட்சக்கணக்கில் மக்கள் வருகை தருகிறார்கள். வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலுக்குச் செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்கெனவே இருந்த நிலையில், சமீபத்தில் குரங்கணி மலையில் காட்டுத்தீயால் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து மலை வனப்பகுதிக்குள் செல்ல விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் சதுரகிரி மலைக்குச் செல்லவும் பல விதிகளை அறிவித்தது வனத்துறை. 
   
இந்த நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷத்திற்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் அனுமதித்திருந்த நிலையில், கடுமையான மழையின் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக யாரையும் அனுமதிக்கவில்லை. பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் இதனால் மிகவும் கவலையடைந்தனர். இந்த நிலையில் மழை தற்போது விட்டுள்ளதால், இன்று முதல் மூன்று நாள்கள் கோயிலுக்குச் செல்ல விருதுநகர் கலெக்டர் உத்தரவிட்டார். அதனால், பிரதோஷ பூஜைக்கு பக்தர்கள் செல்ல தொடங்கியுள்ளனர். மலைக்குச் செல்பவர்களை வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!