கர்ப்பிணிப்பெண் உஷா மரணத்துக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி!

திருச்சியில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில், உஷா உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமராஜ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
உஷா
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்துள்ள சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, தனது மனைவி உஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்காகத் தனது பைக்கில் திருச்சிக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, துவாக்குடி டோல் பிளாசா அருகே, வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீஸார், ராஜா வந்த வாகனத்தை மறித்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜாவை இன்ஸ்பெக்டர் காமராஜ் ஸ்கூட்டரில் விரட்டிச் சென்று, திருவெறும்பூர் பெல் கணேசா ரவுண்டானா அருகே, எட்டி உதைத்ததாகக் கூறப்படும் நிலையில், பைக்கின் பின்புறம் உட்கார்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷாவும், ராஜாவும் கீழே விழுந்தனர். இதில் உஷா சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
இதையடுத்து, கர்ப்பிணியின் மரணத்துக்கு நீதிகேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இறுதியாக, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது நடந்த கலவரத்தில், 27 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதேபோல, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளார். கலவரத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இன்று காலை சிறையிலிருந்து வெளியே வந்த அவர்களை, திருச்சி மத்திய சிறைச்சாலை முன்பு உஷாவின் கணவர் ராஜா, மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து வரவேற்றனர்.
 
அப்போது ராஜா, தன் மனைவிக்காகப் போராடி சிறை சென்ற இவர்களுக்குச் சாகின்ற வரை உண்மையாக இருப்பேன் எனக் கலங்கியபடி பேச அந்த இடமே உணர்ச்சி வயமானது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று வந்தது.
 
இந்த  ஜாமீன் மனுவை நிராகரிக்கக் கோரி திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் உஷா கணவர் ராஜா மக்கள் அதிகாரம் சார்பில் ராஜா ஆட்சேபனை மனுத்தாக்கல் செய்தனர். மேலும், காலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்திட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்து அந்த மனு மதியம் 1 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போதும் எதிர்ப்புகள் வலுக்கவே மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
 
இறுதியாக இன்று மாலை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஆய்வாளர் காமராஜ் மீதான ஜாமீன் மனுவை நீதிபதி லோகேஷ்வரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!