தினகரனின் குடும்பத்தினரை கவனித்த சிறை அதிகாரி!

சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரனின் தங்கை ஸ்ரீதளா தேவி மற்றும் அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோருக்கு  ஓட்டலில் இருந்து  மட்டன், சிக்கன் சாப்பாடு சப்ளை செய்த புழல் கூடுதல் ஜெயிலர் மற்றும் டாக்டர் ஆகியோரை சிறைத்துறை நிர்வாகம் அதிரடியாக மாற்றியது.

தினகரன்

சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகளும், டிடிவி தினகரனின் தங்கையுமான ஸ்ரீதளா தேவி, அவரது கணவர் பாஸ்கரன் ஆகிய இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும், ஸ்ரீதளா தேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 2008-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் விதித்த சிறை தண்டனை, அபராதத்தை உறுதி செய்து கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீதளா தேவி பெண்களுக்கான தனி சிறையிலும், பாஸ்கரன் தண்டனைக்கைதிகள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தங்களை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற அனுமதியளிக்கும்படியும் சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள், தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுமதி மறுத்தனர். இருவரையும் புழல் சிறையில் உள்ள ஜெயில் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிறையில் உணவு சரியில்லை என இருவரும் அதைச் சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது. சிறை அதிகாரிகள் சிலருக்கு லஞ்சம் கொடுத்து வெளியில் இருந்து இருவருக்கும் சாப்பாடு வரவைத்து கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தினமும் மட்டன், சிக்கன்  என விதவிதமான உணவு வகைகளை இருவருக்கும் சப்ளை செய்யப்படுவதாகவும், அதற்காக சிறை டாக்டர் மற்றும் வார்டன் ஆகியோர் தினமும் தினகரன் தங்கையிடம் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக பெற்றதாக புகார்கள் எழுந்தன. 

இது குறித்து சிறைத்துறை இயக்குநர் அசுதோஷ் சுக்லா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் ஸ்ரீதளா தேவி மற்றும் அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோருக்கு வழங்கப்படும் உணவு வகைகளை ரகசியமாக ஆய்வு செய்தனர். அப்போது அவை உணவுகள் வெளியிலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது. இது குறித்த ரிப்போர்ட்டை சிறைத்துறை அதிகாரிகள் இயக்குநர் அசுதோஷ் சுக்லாவுக்கு அளித்தனர். அதன் அடிப்படையில் தினகரன் தங்கைக்கு வெளியில் இருந்து சட்டவிரோதமாக உணவு சலுகை வழங்கியதால் புழல் சிறை கூடுதல் ஜெயிலர் கிருஷ்ணகுமார், புழல் சிறை டாக்டர் சங்கர் ஆகியோர் அங்கிருந்து மாற்றப்பட்டனர். ஜெயிலர் கிருஷ்ணகுமார் பூந்தமல்லி சப் – ஜெயிலுக்கும், டாக்டர் சங்கர் பழவேற்காட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!