அ.தி.மு.கவிலிருந்து கே.சி.பழனிசாமி நீக்கம்..!

அ.தி.மு.கவிலிருந்து அதன் செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிசாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அ.தி.மு.க சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அ.தி.மு.க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி, இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளகூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்திக் குறிப்பில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!