நம்மாழ்வார் போட்டோவை வணங்கிவிட்டு அன்றாடப் பணிகளை ஆரம்பிக்கும் விவசாயி! | The farmer who starts the duty after worshiping nammalwar

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (17/03/2018)

கடைசி தொடர்பு:15:20 (27/06/2018)

நம்மாழ்வார் போட்டோவை வணங்கிவிட்டு அன்றாடப் பணிகளை ஆரம்பிக்கும் விவசாயி!

           

செயற்கை விவசாயத்தில் திளைத்துக் கிடந்த விவசாயிகளில் எண்ணற்றோரை இயற்கை விவசாயம் நோக்கி திருப்பியதில் முக்கியமானவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். இப்போது, ஐ.டி துறை இளைஞர்களின் கைகளைக்கூட கோழி பிடிக்க திசைதிருப்பியதும் அவரது செயல்பாடுகள்தான். அதை உணர்ந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை ஆய்வாளரும், இப்போதைய விவசாயியுமான மனோகரன், அவரது தோட்டத்தில் தினமும் அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு முன்பாக, நம்மாழ்வார் போட்டோவை வணங்கிவிட்டு, பணிகளைச் செய்ய ஆரம்பிக்கிறார். 

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள வேட்டையார்பாளையத்தில் இருக்கிறது, மனோகரனுக்குச் சொந்தமான 20 ஏக்கர் தோட்டம். அவரது தோட்டம் மட்டும் பசுமை போர்த்தி இருக்க, அந்த தோட்டத்தைச் சுற்றியுள்ள மற்ற நிலங்கள் அனைத்தும் வறண்டு பாலைவனம்போல காட்சியளிக்கிறது. இவரது தோட்டத்தில் மா,பலா,வாழை,நெல்லி,கொய்யா,முருங்கை,ஆப்பிள்,தென்னை,சம்பங்கி  என ஏகப்பட்ட பயிர்களும், மரங்களும் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றன. தோட்டத்தின் மேற்கே உள்ள வேப்பமரம் ஒன்றில் நம்மாழ்வார் படத்தை மாட்டி, அதன் கீழே சந்தனம், குங்குமம் தடவி தெய்வமாக வணங்கிவருகிறார் மனோகரன்.

"நான் காவல்துறை பணியில் இருந்தபோதே, நம்மாழ்வார் அய்யாவின் தொடர்பு கிடைத்தது. அவரை எங்கள் தோட்டத்துக்கு அழைத்து வந்தேன். அதற்கு முன்பு வரை, எங்கள் தோட்டத்தில் செயற்கை விவசாயம்தான் நடந்துச்சு. 'இயற்கையோடே பொறந்து வளர்ந்து, இயற்கையோட இயற்கையா சரணாகதி அடையப்போறோம். இதுல,விவசாயம் உள்ளிட்ட எல்லாத்தையும் நாம செயற்கையா செய்யணுமா?'ன்னு கேட்டார். அன்னையிலேர்ந்து நான் இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். ஆரம்பத்துல லாபம் வரலை. நம்மாழ்வார் அய்யா சொன்னவற்றை பாடமா வச்சுக்கிட்டு செயல்பட்டேன். மலடான மண்ணும் வளமாச்சு. அதுல விளைந்த உணவு வகைகளைச் சாப்பிட்டு,எ ங்க உடம்பும் தெம்பாச்சு. அதனால, நம்மாழ்வார் அய்யா போட்டோவை மரத்துல மாட்டி, தினமும் காலையில் வேலையை ஆரம்பிக்கும்போதும், மாலையில் வேலை முடியும்போதும் அவரை கைதொழுது வேண்டிக்கொள்வேன். இதனால், ஒவ்வொரு நாளும் இன்பமா கரையுது" என்றார் நெக்குருக.