தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளராக சையதுகான் நியமனம்..!

தேனி மாவட்டச் செயலாளர் பதவிக்கு, முன்னாள் எம்.பி., SPM சையதுகான் நியமிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாகவே, மாவட்டச் செயலாளர் பதவிக்கு பலர் போட்டிபோட்டுக்கொண்டிருந்த நிலையில், பன்னீர்செல்வத்தின் தீவிர விசுவாசியான சையதுகான் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தங்க தமிழ்ச்செல்வன் மாவட்டச் செயலாளராக இருந்தார். தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக மாறிய பிறகும் அப்பதவி அவரிடமிருந்து பறிக்கப்படாமலே இருந்தது.

குறிப்பாக, பன்னீர்செல்வம் கையில் துணைமுதல்வர் பதவியும், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியும் கிடைத்த பிறகும் இந்நிலை தொடர்ந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தங்க தமிழ்ச்செல்வனிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பிற்காக தேனி மாவட்ட கட்சி அலுவலகத்தில் பேனர் வைப்பதில் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

காவல்துறை தலையீட்டால் அலுவலகம் பூட்டப்பட்டது. அலுவலகம் இருக்கும் இடம், பன்னீர்செல்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது சொந்தச் செலவில் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், தற்போதைய ஆவணங்களின்படி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெயரில்தான் அலுவலகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால், தினகரன் தரப்பினர் அலுவலகத்திற்குச் சொந்தம்கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், புதிய மாவட்டச் செயலாளரான சையதுகான், கட்சி அலுவலகம் செல்வாரா என்பது தற்போதைய மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!