வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (17/03/2018)

கடைசி தொடர்பு:17:34 (02/07/2018)

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமளித்த மாவட்ட ஆட்சியர்..!

 

'பள்ளி மாணவ, மாணவியர்கள் தாங்கள் என்னவாக வேண்டும் என மனதில் உள்வாங்கிப் படித்து, அதுவாகவே மாற வேண்டும்' என்று மாணவர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் அறிவுரை வழங்கினார்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், திருமாணிக்கம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியர்களின் கற்றல் திறனை ஆய்வுசெய்தார். அப்போது, மாணவர்களின் பாடநூலில், 'நன்கு படித்து வருங்காலத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும்' என எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

அதோடு அவர்களுக்கு, 'நாள்தோறும் படிப்பதற்கு முன் இந்த வாசகத்தைப் படித்துவிட்டு, பிறகு பாடத்தை உள்வாங்கிப் படித்தால், நீங்கள் நினைத்த இடத்தை அடைய முடியும்' எனவும், 'பள்ளி மாணவ, மாணவியர்கள் தாங்கள் என்னவாக வேண்டும் என மனதில் உள்வாங்கிப் படித்து, அதுவாகவே மாற வேண்டும்' என்றும் அறிவுரை வழங்கினார். பின்னர், கொடையூர் நியாய விலைக்கடையை ஆய்வு மேற்கொண்டு, குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட உணவுப்பொருள்கள் விவரத்தை பயனாளியின் குடும்ப அட்டையுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். இருப்பு கோப்பு, அதற்கான பொருள்கள் இருப்புகுறித்து ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளின் கைப்பேசிக்கு பொருள்கள் வாங்கப்பட்ட விவரம்குறித்து குறுந்தகவல் செல்கிறதா? என்பதையும் உறுதிசெய்தார்.