காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டிய வியாபாரிகள் சங்கத்தினர்..!

தமிழ்நாடு வணிகர் சங்க அமைப்பினர், காவல்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

சென்னையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நிறைவுபெற்றவுடன், பேரமைப்பின் கடலூர் மண்டல இளைஞர் தலைவர் டி.சண்முகம், கடலூர் மாவட்ட பேரமைப்புச் செயலாளர் பி.வீரப்பன் ஆகியோர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்றனர். 

அங்கு, கூடுதல் காவல்துறை இயக்குநர் ராஜீவ்குமார் மற்றும் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆகிய இருவரையும் சந்தித்து சால்வை அணிவித்து, நன்றி கூறினர். இந்த திடீர் சந்திப்புகுறித்து மண்டலத் தலைவர் பண்ருட்டி சண்முகம் கூறியதாவது, "இரண்டு அதிகாரிகளும் முன்பு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களாக பணியாற்றியபோது, வணிகர்கள் மற்றும் பொது மக்களின் புகார் மனுமீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பிரச்னைகளைத் தீர்த்துவைத்தனர். அவர்கள், இன்று பதவி உயர்வு பெற்று வேறு பணியிலிருந்தாலும் அவர்களின்  சேவையை நாம் மறக்கலாகாது. தேடிச்சென்று நன்றி பாராட்டவேண்டியது நமது கடமை.

தமிழக காவல்துறைமீது பல்வேறு விமர்சனங்கள் படருகின்ற இத்தருணத்தில், காவல்துறையின் நல்ல அம்சங்களையும் நாம் நன்றியுடன் நினைவுகூர்வோம். அதேவேளை, காவல் பணியில் இருந்துகொண்டு மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுதல், பணியில் நேர்மையற்றிருத்தல், குற்றவாளிகளுக்குத் துணைபோதல் போன்ற பல்வேறு அறமற்ற செயல்களில் ஈடுபடும் காவலர்கள்மீது கடும் நடவடிக்கை தேவை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!