வெளியிடப்பட்ட நேரம்: 08:41 (17/03/2018)

கடைசி தொடர்பு:08:41 (17/03/2018)

``பிரதமர் வீட்டின் முன் தற்கொலை செய்துகொள்வோம்” -அய்யாக்கண்ணு ஆவேசம்!

   அய்யாக்கண்ணு

``விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், பிரதமர் மோடி வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வோம்” என தேவகோட்டையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு  தெரிவித்தார். 

சிவகங்கை மாவட்ட கிராமங்களில், மரபணு மாற்று விவசாயத்தின் கெடுதல்குறித்து விழிப்புஉணர்வு துண்டுப் பிரசுரங்களை வினியோகித்துக்கொண்டு தேவகோட்டை வந்த விவசாய பிரதிநிதி சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய  அவர், ``நீதிமன்ற அனுமதிபெற்று மரபணு மாற்று விவசாயத்தைத் தடைசெய்ய, வலியுறுத்திவரும் எங்களை பா.ஜ.க-வினர் தாக்க முற்படுகின்றனர். அவ்வாறு தாக்க முற்படுவது, நம் நாடு ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது” எனத்  தெரிவித்தார். மேலும், தமிழக பட்ஜெட்டில் விவசாய நிதி ஒதுக்கீடு பெயரளவுக்கு மட்டுமே உள்ளது .

விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் செலவழிக்கப்படுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பினார். பின்பு, காவிரி மேலாண்மை வாரியம்குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அய்யாக்கண்ணு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டெல்லியில் பிரதமர் வீட்டு வாசல் முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொள்ளவோம்' என்றும் ஆவேசமாகக் கூறினார். முன்னதாக, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய இடங்களில் துண்டுப் பிரசுரங்களை வினியோகம் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த பாஜகவினர், அய்யாக்கண்ணுவிற்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அதைத் தடுத்து, போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க