வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (17/03/2018)

கடைசி தொடர்பு:10:10 (17/03/2018)

``தேவாலயங்கள் பாதுகாப்பு இல்லாமல் உள்ளன!” - சிறுபான்மையினர் நல ஆணையரிடம் புகார்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்மூலம் சிறுபான்மையின பொதுமக்களுக்கான மனுக்கள் பெறும் கூட்டம், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர்,  பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

சிறுபான்மையினர்


இதில், மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர், பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் பேசுகையில், “தமிழகத்தில், சிறுபான்மையினர் அரசுத் திட்டங்களை முழுமையாக பெறும் வகையில் அரசு அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. மேலும், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் சீரமைப்பதற்கான பணிகளும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஆதரவற்ற முஸ்லீம், கிறித்தவர்களுக்கு மாதந்திர உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது. அத்துடன், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

சுயஉதவிக் குழுக்கள்மூலம் தொழில் பயிற்சியுடன் வங்கிக்கடன் உதவியும் வழங்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை கடனுதவியாக வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல உலமாக்களுக்கும் நலவாரியம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் உதவித்தொகை மற்றும் கல்விக்கடன், தொழில் கடன் போன்ற நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  டாம்கோ மூலம் கடனுதவிகளும் வழங்கப்பட்டுவருகிறது.

சிறுபான்மையின பொதுமக்கள், அரசின் திட்டங்கள்மூலம் பயன்பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல சிறுபான்மையினரின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் சிறப்புக் கவனம் எடுத்துச் செயல்படுத்துவதோடு, அவர்களின் பாதுகாப்புத்தன்மையையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்’ என அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்.

''காரைக்குடி காளையார்கோவில் பகுதியில் உள்ள தேவாலயங்கள், மதவெறியர்களால் இடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்று ஆணையரிடம் கோரிக்கை வைத்தார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேராசிரியர் ஜேம்ஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கலாவதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க