வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (17/03/2018)

கடைசி தொடர்பு:10:46 (17/03/2018)

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை ஜப்தி செய்த நீதிமன்றம்!

இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், விழுப்புரம் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை நீதிமன்றம் ஜப்திசெய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வீட்டு மனைகள் மற்றும் வீடுகளைக் கட்டி விற்பனைசெய்யும் பணிகளைச் செய்துவருகிறது. இதற்காக தனி நபர்களிடம் இருந்து நிலங்களை வாங்கும் இந்த நிறுவனம், அப்போதைய சந்தை மதிப்புத் தொகையை அவர்களுக்கு வழங்கும். அதன்படி, கடந்த 1994-ம் ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த சாந்தா என்ற பெண்ணிடமிருந்து 75.48 சென்ட் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்காக, சதுர அடி ஒன்றுக்கு 8 ரூபாய் 80 பைசா என்று கணக்கிட்டு, சாந்தாவுக்கு இழப்பீட்டுத் தொகையையும் அளித்தது. ஆனால், வீட்டு வசதிவாரியம் வழங்கிய தொகை சந்தை மதிப்பைவிட குறைவு என்று குற்றம் சுமத்திய சாந்தா, கடந்த 2007-ம் ஆண்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2013-ம் ஆண்டு சதுர அடி ஒன்றுக்கு 20 ரூபாய் 80 காசுகள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மதிக்காத வீட்டுவசதி வாரியம், சாந்தாவுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்திவந்தது. இதன் காரணமாக, மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார் சாந்தா. அதையடுத்து, ஏற்கெனவே நீதிமன்றம் வழங்க உத்தரவிட்ட தொகையை வட்டியுடன் சேர்ந்து 30 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் மீண்டும் உத்தரவிட்டது.

மேலும், பிப்ரவரி 20-ம் தேதிக்குள் இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்காவிட்டால், விழுப்புரம் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் ஜப்திசெய்யப்படும் என்று கூறியிருந்தது நீதிமன்றம். ஆனால், இந்த உத்தரவையும் வீட்டுவசதி வாரியம் கண்டுக்கொள்ளவில்லை. அதனால், விழுப்புரம் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை உடனே ஜப்திசெய்ய உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி, அந்த அலுவகலத்தில் இருந்த கம்ப்யூட்டர், மேஜை மற்றும் நாற்காலிகள், பீரோ உள்ளிட்ட பொருள்களை ஜப்திசெய்து, நீதிமன்றம் எடுத்துச்சென்றது. அரசு அலுவலகம் ஒன்று ஜப்திசெய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.