வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (17/03/2018)

கடைசி தொடர்பு:11:32 (17/03/2018)

``காசு கொடுத்து தண்ணீர் வாங்க, பணம் என்ன கொட்டியா கெடக்கு!" - சாலைமறியலில் பொங்கிய மக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில், பல பகுதிகளிலும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் கடும் அவதிக்குள்ளாகும்  மக்கள், பல்வேறு இடங்களில் இன்று (17.3.2018) காலையிலேயே திடீர் சாலை மறியலில் இறங்கிவிட்டனர். 

குடிநீர் கேட்டு சாலைமறியல்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலுள்ள துவார் ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில், கடந்த சில வாரங்களாக கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு, தங்கள் பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் முறையிட்டனர். அவர்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி அனுப்பி இருக்கிறார்கள். ஆனாலும், தண்ணீர் வந்தபாடில்லை. அடுத்து, சில நாள்களில் ஊர் இளைஞர்களும் பெரியவர்களும் அதிகாரிகளிடம் குடிநீர்ப் பிரச்னை பற்றிப் பேசி  யிருக்கிறார்கள். அதிகாரிகள் முறையான பதிலைக் கூறாமல் நழுவியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்துப் பெண்கள், இன்று காலையிலேயே  காலிக்குடங்களை எடுத்துக்கொண்டு வந்து, சாலையில் வரிசையாக வைத்து மறியலில் ஈடுபட்டனர். நெடுநாள்களாக நீடித்துவரும் குடிநீர் பஞ்சத்தை உடனடியாகச்  சரிசெய்ய வேண்டும் என்றும், முறையாக பதில் தராத,செயல்படாத அலுவலர்களை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கிடப்பில் கிடக்கும் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்திக் கோஷமிட்டனர். 

துவார் ஊராட்சிக்குட்பட்ட பல  கிராமப் பகுதிகளில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர்க் குழாய்கள் மூலமாக 2 அல்லது 3 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் போதுமானதாக இல்லை. "ஒரு வீட்டுக்கு முழுதாக இரண்டு குடம் தண்ணீர்கூட கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் தண்ணீரை 3 நாள்களுக்கு நாங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். இதனால், தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்துவருகின்றோம். அதிகாரிகளைக் கேட்டால், தண்ணீர் இருப்பு இருந்தவரை ஒழுங்காகக் கொடுத்துதானே வந்தோம். இப்போது இருப்பு இல்லை என்கிறார்கள். கோடைக்காலம் ஆரம்பமாவதை உணர்ந்து, அவர்கள்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதைச் செய்யாமல், தண்ணீர் இருப்பு இல்லை என்று பொறுப்பில்லாமல் பதில் கூறினால் எப்படி?" என்ற குற்றச்சாட்டை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர். "டவுன்ல இருக்கிற ஜனங்க மாதிரி காசு குடுத்து குடிக்க தண்ணீர் வாங்க எங்ககிட்ட பணம் என்ன கொட்டியா கெடக்கு? ஒருகாலத்துல தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கேட்டு வந்தவங்களுக்கு, சொம்பு நிறைய மோர் கொடுத்து உபசரிச்சவங்க நாங்க. இன்னிக்கு வீட்டுல இருக்கிற குழந்தைங்க தண்ணீனு கேட்டா, அள்ளிக்கொடுக்க வழியில்லாமல் நிக்கிறோம்"என்று இந்தப் பகுதி பாட்டிமார்கள்  புலம்புகின்றனர்.

தற்போது, வெயிலின் தாக்கமும் அதிகமாகி, வெக்கையும் வியர்வையும் படுத்திஎடுப்பதால், நாவறட்சியில் தவித்துக் கிடப்பதாக பரிதவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதுதவிர, கறம்பக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில்  நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்நிலையில், கிணறுகள், குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டுகிடக்கின்றன. இதனால் சமைக்க, துணி துவைக்க, பாத்திரங்களைக் கழுவ உள்ளிட்ட  தேவைகளுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிப்பதாக மக்கள் கூறுகின்றனர். ''பங்குனி மாதம் ஆரம்பித்து 3 தேதிதான் ஆகுது. இப்பவே இப்படினா, இன்னும் சித்திரை, வைகாசி மாசமெல்லாம் என்னாகுமோ தெரியலையே" என இப்பகுதி மக்கள் இப்போதே பீதியடைய ஆரம்பித்துவிட்டார்கள்.இதேபோல, மாவட்டத்தின் பல பகுதிகளிலும்  கடந்த சில நாள்களாக குடிநீர் தொடர்பான  சாலைமறியல் போராட்டங்கள்  நடந்துவருகின்றன.