அய்யனார் கோயில் திருவிழா! - கோலாகலமாக நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியில், ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து முடிந்தது. 

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, கீழக்குறிச்சியில் உள்ள கலங்காத கண்ட அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இதைக் காண்பதற்காக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வந்திருந்தனர். இதுதவிர, உள்ளூர் மக்கள் உற்சாகம் பொங்க, பார்வையாளர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் குவிந்திருந்தனர்.

முன்னதாக, வாடிவாசல், பார்வையாளர்களுக்கான இடம், முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான இடம், காளைகள் வெளியேறும் பகுதியின் இருபுறங்களிலும் தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு முன் ஏற்பாட்டுப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ், கடந்த 15-ம் தேதியன்று  பார்வையிட்டு, சில மாற்றங்களை விழா நடத்தும் கமிட்டியாரிடம் கூறி, ஜல்லிக்கட்டு நடத்த ஒப்புதல் வழங்கினார்.

 
ஜல்லிக்கட்டுஇதைத் தொடர்ந்து, காலையில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிகட்டுப் போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் கொடியசைத்துத் துவங்கிவைத்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர், கொஞ்சநேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட்டார். திண்டுகல், மதுரை, சிவகங்கை, கரூர், உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பிற பகுதிகளிலிலிருந்தும் வாகனங்களில்  அழைத்து வரப்பட்டிருந்த 699 காளைகள், இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. மேலும், 199  மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வழக்கமான பாணியில் தெறிக்கத் தெறிக்க போட்டி நடந்தது. காளைகளின் பாய்ச்சலும், மாடுபிடி வீரர்களின் ஏர் தழுவுதலும் பார்வையாளர்களின் ஆரவாரமுமாக அந்த இடமே கொஞ்சம்கூட ஓய்ந்துவிடாத அளவுக்கு களைகட்டியது. சினிமா சண்டைப் பயிற்சி இயக்குநரான ஜாக்குவார் தங்கம், இந்த ஜல்லிக்கட்டைக் காண்பதற்காக வந்திருந்தார். தங்கள் மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டைக் காண்பதற்கு, திரைகலைஞர்கள் நேரில் வருவது மக்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில், மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மணிகண்டன், விஜயக்குமார், விஜயன் உள்பட 7 பேரும் பார்வையாளர்கள் பசுபதி, வடிவேலு, மனோகரன், வெள்ளைச்சாமி  உள்பட 10 பேரும்  காயமடைந்தனர். அவர்களுக்கு, ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தின் அருகே தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இவர்களில் 4 பேர், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  ஊர் பொதுமக்களும் விழாக் குழுவினரும் செய்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!