'எதற்கும் ஒரு வரைமுறை உண்டு' - கொதிக்கும் ஜெயக்குமார் | Minister Jayakumar says why kc palanisamy removed from admk party

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (17/03/2018)

கடைசி தொடர்பு:12:00 (17/03/2018)

'எதற்கும் ஒரு வரைமுறை உண்டு' - கொதிக்கும் ஜெயக்குமார்

''அ.தி.மு.க-வின் கொள்கை முடிவுகளைப் பற்றி கே.சி.பழனிசாமி பேசியதால்தான், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்'' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்தநிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அ.தி.மு.க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், ``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசுக்கு அ.தி.மு.க சார்பில் மிகப் பெரிய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அழுத்தம், மத்திய அரசிடம் எந்தக் கட்சியும் இதுவரை கொடுத்ததே கிடையாது'' என்றார். 

மேலும், பா.ஜ.க-வின் அழுத்தம் காரணமாகத்தான் கே.சி.பழனிசாமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு, ''கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டதற்கும், பா.ஜ.க-வுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, இரண்டுக்கும் முடிச்சுப்போட வேண்டாம். அ.தி.மு.க., ஒரு மாபெரும் இயக்கம். கட்சிதான் கொள்கை முடிவுகளை எடுக்கும். தனிப்பட்ட முறையில் யாரும் கொள்கை முடிவுகளை எடுக்க முடியாது, எடுக்கவும் கூடாது. எதற்கும் ஒரு வரைமுறை உண்டு. அடிப்படை விதியை கே.சி.பழனிசாமி மீறியதால், அவர் மீ து நடவடிக்கை எடுக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.